====கண்ணன் ஜீவா====
இளைஞர்கள் புத்தாண்டை வெடி வெடித்து வரவேற்பார்கள். சற்று நடுத்தர வயதுடையோர் புத்தாண்டை ஒரு புதிய தீர்மானத்துடன் வரவேற்பார்கள். லெஜண்ட்ஸ் மட்டும்தான் வித்தியாசமாக புத்தாண்டை ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியுடன் வரவேற்பார்கள். அப்படி கடந்த 21 ஆண்டு காலமாக லெஜண்டாக இருந்த சென்னை ஓப்பன் டென்னிஸ் கடந்த 2016 ஆம் ஆண்டோடு விடைபெற்றது. இது சென்னையில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களுக்கு குறிப்பாக டென்னிஸ் பிரியர்களுக்கு ஏமாற்றம்தான். எனவே தான் இந்தாண்டு புத்தாண்டை சென்னையில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் வெறும் கையுடன் வரவேற்றனர்.21 ஆண்டுகள் பாராட்டி , சீராட்டி வளர்த்த ஒரு குழந்தையை வெடுக்கென்று பிடுங்கி அடுத்தவர் கையில் கொடுத்தால் நம்மிடம் என்ன மனநிலை இருக்குமோ அதே மனநிலைதான் சென்னை ஓபன் தொடர் மாற்றப்படும் போது இருந்தது. சென்னை ஓபன் தற்போது மகாராஷ்டிரா ஓபன் என்ற பெயரில் புனே நகரில் நடைபெற்று வருகிறது.சென்னையில் இந்தப்போட்டி தொடர்ந்து நடைபெறுவதற்கும் நகருக்கும் டென்னிஸ் குறித்த நீண்ட நாள் பந்தம் உண்டு. காரணம் இந்தியாவில் டென்னிஸ் பிரபலம் ஆகாத நாள் முதல் இன்று வரை இந்திய டென்னிஸ் வரலாற்றில் தமிழக வீரர்களின் பங்கு அளப்பரியது. 60 களில் ராமநாதன் கிருஷ்ணன், 80 களில் ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், இப்போது மகேஷ் பூபதி, ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் என டென்னிஸ் களத்தை ஆண்ட தமிழக வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த திறமைகளை எல்லாம் பார்த்துதான் சர்வதேச டென்னிஸ் சங்கம் தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரை நடத்தும் வாய்ப்பை 1997 ஆம் ஆண்டு சிங்காரச் சென்னைக்கு வழங்கியது. அன்று முதல் கடந்தாண்டு வரை உலகின் தலைசிறந்த வீரர்களான கார்லோஸ் மோயா, மரின் சிலிச், வாவ்ரிங்கா, ரபேல் நடால் உள்ளிட்ட பலரைக் கண்ட நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் இப்போது மயானம் போல் அமைதியாகக் கிடக்கிறது.சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் கடும் நிதி நெருக்கடிக்கு இடையே நடத்தப்பட்டு வந்தது. இதனால் டென்னிஸ் போட்டியை நடத்த அரசே நிதியுதவி அளிக்க வேண்டும் என்று 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் கோரிக்கை வைத்தது. இதைத் ஏற்றுக் கொண்ட அவர் சென்னை ஓபன் போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் நிதி வழங்கினார். மேலும் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த 4 கோடியே 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கினார். தமிழக அரசை தொடர்ந்து இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி என பல பொதுத்துறை வங்கிகளும் நிறுவனங்களும் பல்வேறு வகையில் நிதியுதவி செய்தன. இதனால் எந்த விதபிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து அந்தப்போட்டி நடைபெற்றது.

ஏர்செல் நிறுவனம் நிதியுதவி அளிப்பதை நிறுத்திய பின்னர் புதிய நிறுவனத்தை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தேடியது. இதற்கிடையே ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாக பேச்சு எழுந்தது. சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகளை நடத்தித்தரும் ஐஎம்ஜி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் மும்பை என்பதால் அந்த நிறுவனம் இந்த போட்டியை தனதுசொந்த மாநிலத்திற்கு கடத்திச் செல்வதில்குறியாக இருந்தது. இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியை நடத்த தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திற்கு வழங்கியிருந்த அங்கீகாரத்தை ரத்து செய்வதாக ஐஎம்ஜி அறிவித்தது. இனிமேல் சென்னை ஓபன்,மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் புனேயில் நடைபெறும் என்றும் அது அறிவித்தது. திட்டமிட்டபடி ஏர்செல் விலகியதுடன் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியும் நகரை விட்டு சென்றுவிட்டது.இதனைத் தொடர்ந்து முதல் முறையாக மகாராஷ்டிராவில் கடந்த 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. உண்மையில் தமிழகத்தை விட சிறப்பாக இந்தத் தொடரை மகாராஷ்டிரா நடத்தியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தம் கிடைத்த அடுத்த நாளே விளையாட்டை விளம்பரப்படுத்தும் பணியில் மகாராஷ்டிரா டென்னிஸ் சங்கம் தீவிரமாக இறங்கியது.இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா ஸ்பான்சராக இடம்பிடித்தது. போட்டிக்கான பரிசுத் தொகையும் ரூ.3.50 கோடியாக உயர்த்தப்பட்டது. இப்போது வெற்றிகரமாக போட்டியையும் நடத்தி முடித்துள்ளது.
இதை எல்லாம் பார்த்தால் இனிமேல் சென்னை ஓபன் டென்னிஸ் சென்னைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதையும் மீறி நடைபெற வேண்டும் என்றால் அவர்களை விட பெரிய ஸ்பான்சரை பிடித்து, அதிக அளவு பரிசுத் தொகையை அறிவிக்க வேண்டும். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மேலும் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தங்களது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களே தவிர விளையாட்டு எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

சென்னை ஓபன் டென்னிஸ் ரத்து என்ற அறிவிப்பு வந்த போது தமிழகத்தைச் சேர்ந்த மூத்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் இது ‘அவமானகரமானது’ என்று தெரிவித்தார். ‘சென்னைக்கு சிறப்புச் சேர்த்த டென்னிஸ் தொடர் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவதை தமிழக அரசு மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், விளையாட்டுத் துறை அமைச்சரான செங்கோட்டையனும் இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தரவில்லை. சென்னையின் பெருமை பறிபோனது குறித்து கவலையும்படவில்லை.இனிமேலும் அவர்களிடம் இருந்து எந்த விளக்கமும் வரப்போவதும் இல்லை. பதவிக்காக தமிழ்நாட்டின் பல பாரம்பரியப் பெருமைகளை விட்டுக் கொடுத்த அவர்களுக்கு சென்னை ஓபன் டென்னிஸ் எல்லாம் ஒரு சாதாரண விஷயம். மொத்தத்தில் லெஜண்டாக புத்தாண்டை வரவேற்கும் வாய்ப்பு இனி நமக்கு கிடைக்கப்போவது இல்லை.

Leave A Reply

%d bloggers like this: