நியூயார்க்;
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பற்றி பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ஃப் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகம் டிரம்ப்பின் மிரட்டலையும் மீறி வெளியிடப்பட்டது.கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.
அமெரிக்க பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ப், ட்ரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘நெருப்பும் சீற்றமும் – ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள்’ என்ற அந்த புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் “ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்கும் முன்பாக, 2016-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க ஐடித்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், ட்ரம்பை சந்தித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, எச்1பி விசாவுக்கு எதிராக பேசிய நிலையில் அத்தகைய நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எச்1பி விசாவுக்கு எதிராக எதையும் செய்யப் போவதில்லை என ட்ரம்ப் அவர்களுக்கு உறுதியளித்தார்” என அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எச்1பி விசாவுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி ட்ரம்ப் தற்போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோலவே ட்ரம்ப் பற்றிய வேறு பல தகவல்களும் இந்தப் புத்தகத்தில இடம் பெற்றுள்ளன.பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்றுள்ள இந்த புத்தகம் அமெரிக்காவில் வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை வெளியிடாமல் தடுக்கும் பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வந்தனர். எனினும் இது வெற்றி பெறவில்லை.திட்டமிட்டபடி, அந்த புத்தகம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு புத்தக கடைகளில் இந்த புத்தகம் அதிகஅளவு விற்பனை யானது. வாஷிங்டனில் பல கடைகளிலும் நள்ளிரவு வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.இதனிடையே அந்த புத்தகத்தில் இடம்பெற்றள்ள அனைத்தும் உண்மைக்கு மாறானவை என, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply