ஈரோடு, ஜன.5-
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்து பலமாதங்கள் ஆகியும், பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக தகுதி உள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.தனுஷ்கோடி, யு.பழனிச்சாமி, சுப்புலட்சுமி உட்பட பெரும் திரளானோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெரும் திரள் முறையீடு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் நாயகம், பொருளாளர் சீனிவாசராகவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.