புதுதில்லி, ஜன. 5-

மத்திய மோடி அரசின் கொள்கைகளால் ஆதாயம் அடைந்திருப்பவர்கள் கார்ப்பரேட்டுகள் மட்டுமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வியாழக்கிழமையன்று நாட்டின் பொருளாதாரம், முதலீட்டுக்கான சூழல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அதிகரித்துவரும்  வேலையின்மை சவாலை எதிர்கொள்வதன் அவசியம் குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:

இது ஒரு மிகவும் முக்கியமான விவாதப்பொருளாகும். ஐமுகூ அரசாங்கம் கொள்கைப் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தது என்று மாண்புமிகு உறுப்பினர் பூபேந்தர் யாதவ் மிகச்சரியாகவே குறிப்பிட்டார்.   நாங்களும் ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கையை விமர்சித்திருக்கிறோம். கொள்கைப் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த ஐமுகூ அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளை நாங்கள் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் நிலை என்ன? இந்த அரசாங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் (Intensive Care Unit-இல்) இருக்கிறது. அதிலிருந்து இது வெளியே வரும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி வெளியே வரும்போது அதன் ஆயுட்காலம் முடிந்திருக்கும். அரசாங்கத்தின் காலம் 2019இல் முடிந்துவிடும்.

இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? பொருளாதாரும் முற்றிலுமாக சிதிலமடைந்து கிடக்கிறது.  இந்தியா வர்த்தகம் செய்வதற்கான தரவரிசையில் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் யாருக்கான வர்த்தகம்? உண்மையில் இந்தியா உலகப் பட்டினித் தரவரிசையில் அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம், இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது. ஆனால் அதனால் வேலை வாய்ப்பினை அளிக்க முடியவில்லை. உலகப் பட்டினி அட்டவணை (Global Hunger Index)யில் இந்தியாவின் தரம் கீழே சென்றுகொண்டிருப்பதாக, கூறுகிறது. உங்கள் ஆட்சியில் பட்டினிக் கொடுமைக்கு பலர் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாட்டின் முன்னேற்றம், முதலீட்டின் காரணமாக வந்திருக்கிற ஆதாயம் மற்றும்  நாட்டின் வளம் ஆகியவற்றை வெறுமனே கூச்சலிடுவதால் அளந்திட முடியாது. மாறாக உற்பத்தித்திறனையும், வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமாகவே அளவிட முடியும். நான் உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுக்க முடியும். நம் நிதியமைச்சர், சென்ற பட்ஜெட் உரையின்போது, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு (MNREGA) நிறைய பணம் ஒதுக்கீடு செய்திருப்பதாகக் கூறினார். ஆனால் மொத்த வேலைநாட்கள் 23,515க்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும், வேலை நாட்கள் சதவீதம் என்பது 2015-16இல் 44 நாட்கள், 2016-17இல் 46 நாட்கள் மற்றும் 2017-18இல் வெறும் 7 நாட்கள் மட்டுமேயாகும். இது தமிழ்நாட்டின் நிலை. அஇஅதிமுக உறுப்பினர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு இது தெரியும்.

2014-15இல் 1.15 லட்சம் வேலைகளை உருவாக்கி இருக்கிறீர்கள். இது என்னுடைய விவரம் கிடையாது. நீங்கள் அளித்துள்ள விவரம். 2015-16இல் நீங்கள் 2.3 லட்சம் வேலைகளை உருவாக்கி இருக்கிறீர்கள். 2016-17இல் மேலும் சற்றுக் கூடுதலாகி இருக்கிறது. நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த விவரங்களையெல்லாம் வேலையிழப்பு மற்றும் வேலையின்மை ஆகிய விவரங்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப் பட்டிருக்கின்றன.

பிரதமர் மோடி ஒவ்வோராண்டும் இரண்டு கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆளும்கட்சியின் தலைவர், அமித் ஷா, இங்கே அமர்ந்திருக்கிறார்.  கடந்த மூன்றாண்டுகளிலும் நீங்கள் அளித்திட்ட வேலை வாய்ப்புகளைக் கூட்டிப் பார்த்தோமானால்கூட அது 50 லட்சத்தைக்கூட தாண்டவில்லை. அது எதிர்மறையாக இருக்கிறது.

அதேபோன்று விவசாய நெருக்கடி மிகவும் மோசமாகி இருக்கிறது. இப்போதும் நாம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து எவ்விதமான உதவியும் கிடையாது. விவசாயப் பிரச்சனை மாநில அரசுப் பிரச்சனை என்று நீங்கள் கூறுகிறீர்கள். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.  சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த நீங்கள் தயாராயில்லை. இதனை அமல்படுத்துவோம் என்று நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியிருந்தீர்கள். இத்தகைய உங்கள் கொள்கைகள் அனைத்தும் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.

இந்த ஆட்சியால் ஆதாயம் அடைந்தவர்கள் என்றால் அது கார்ப்பரேட்டுகள் மட்டுமே.    “ரூபாய் நோட்டுகள் செல்லாது மற்றும் ஜிஎஸ்டி வரி” போன்றவற்றை விமர்சிக்காதவர்கள் இந்தக் கார்ப்பரேட்டுகள் மட்டுமே. மற்ற அனைத்துப்பகுதி மக்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். நாட்டின் செல்வ வளத்தில் 65 சதவீதம், நாட்டு மக்களில் 1 சதவீதமாக உள்ளவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதாவது நாட்டின் 65 சதவீத செல்வாதாரத்தை, நாட்டில் 1 சதவீதமாக உள்ளவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். உண்மையில், நாட்டுமக்களில் பெரும்பான்மையானவர்களைச் சூறையாடி, நாட்டு மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரிடம் ஒப்படைப்பது என்பது தினசரி வழக்கமாக மாறி இருக்கிறது. உங்கள் நவீன தாராளமயக் கொள்கையின் மூலமாக இதனைத்தான் மேம்படுத்தி இருக்கிறீர்கள்.

இந்த ஆட்சியில்  லஞ்சம் என்பது கழுத்தளவுக்கு வந்துவிட்டது. அவர்களால் தங்கள் அரசாங்கம் ஊழலற்ற அரசாங்கம் எனக் கூற முடியாது. எங்கே நீங்கள் சென்றாலும் இதனைப் பார்க்கலாம். இந்த அரசாங்கத்தின் கொள்கை பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. உண்மையில் இந்த அரசாங்கத்தின் கொள்கை என்பது ஊழல் கொள்கையே. ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டே ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்தக் கொள்கையும் நாட்டைக்காப்பாற்றக் கூடிய விதத்தில், நாட்டு மக்களைக் காப்பாற்றக்கூடிய விதத்தில், லட்சக்கணக்கான படித்த மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: