தில்லி,

பீமா கோரேகான் நினைவு தினத்தின் போது தான் வன்முறையை தூண்டும் வகையில் பேசவில்லை என்றும், புனேயில் நடந்த தலித்துகளுக்கு எதிரான கலவரம் குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என்றும் குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

பீமா கோரேகான் போர் வெற்றியின் 200ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி சனிவார்வாத கோட்டையில் சிறுபான்மையினர் அமைப்புகளின் சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஜராத் வத்காம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தலித் ஆர்வலருமான ஜிக்னேஷ் மேவானி, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்  உமர் காலித், ராதிகா வெமுலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிலையில் விழாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் 153 ஏ, 505, 117 ஆகிய பிரிவுகளின் கீழ் புனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தில்லி செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ் மேவானி ,

நான் இதுவரை பீமா கோரேகான் சென்றதுமில்லை, வன்முறையை தூண்டும் விதமாக பேசவும் இல்லை. குஜராத் சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சி தான் சந்தித்த தோல்வியை மறைப்பதற்காக என் மீது களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

எங்களுக்கு சாதியில்லாத சமுதாயம் வேண்டும். ஒருபுறம் நாம் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அதே வேலையில், சாதி ரீதியிலான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நான் குறிவைக்கப்பட்டுள்ளேன். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. குஜராத்தில் தான் சந்தித்த இழப்பிற்கு பழி தீர்ப்பதற்காக பாஜக இதை செய்கிறது. புனேயில் நடந்த தலித்துகளுக்கு எதிரான கலவரம் குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்?

தலித்துகள் மற்றும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள்.

தலித்துகள் மீதான இந்த அடக்குமுறை தொடர்ந்தால், இதன் தாக்கத்தை மோடியும் அவரது கட்சியும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தெரிந்து கொள்வார்கள். ஜனவரி 9 ஆம் தேதியன்று மநுஸ்மிருதி நூலை ஒரு கையிலும், அரசியலமைப்பை மறுக்கையிலும் ஏந்தி பேரணியாக சென்று பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட உள்ளோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: