கோவை, ஜன.5-
போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தன.
கோவை கோட்ட போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மண்டலங்களில் சுமார் 3 ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் சுமார் 1,200க்கும் மேற்பட்டவை நகர பேருந்துகளாகும். மீதமுள்ள பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக. கோவை கோட்டத்தில்
உள்ள 45 கிளைகளில் இருந்து 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

மேலும், தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி உக்கடம், சுங்கம், மேட்டுப்பாளையம் சாலை, சூலூர் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகபணிமனைகளின் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, இப்போராட்டத்தை பயன்படுத்தி தனியாருக்கு சொந்தமான வேன் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலித்தனர். குறிப்பாக மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் ரூ. 500 வரை கட்டணம் வசூலித்தனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மின் ஊழியர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் இடையர் பாளையம் பிரிவில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மண்டல செயலாளர் மதுசூதனன், சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் பாலகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 835 அரசு பேருந்துகளில் வேலை நிறுத்தம் காரணமாக 780 பேருந்துகள் இயக்கப்படவில்லை. இது சுமார் 90 சதவீகிதமாகும். இதனால் ஈரோட்டில் இருந்து கோவை, நாமக்கல், சேலம், கரூர், சத்தி செல்ல கூடிய விரைவுப் பேருந்துகள் மற்றும் பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, அரச்சலூர், கொடுமுடி போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகளும் ஆங்காங்கே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. இப்பேருந்துகளுக்கு காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
தாராபுரம்:
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைத்தத்தின் எதிரொலியாக தாராபுரம் கோட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தாராபுரம் கோட்டத்தில் இருந்து கருர், கோவை, திருப்பூர், பழனி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 86 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. மேலும், திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து, செல்லும் தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் உதகை,கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 360க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஊழியர்கள் இயக்கவில்லை, இதற்கிடையே தனியார் பேருந்து ஒட்டுநர் மற்றும் லாரி ஒட்டுநர்களை கொண்டு மாவட்ட நிர்வாகம் ஒரு சில பேருந்துகளை இயங்கின. ஆனால், மலை மாவட்டமான நீலகிரியில் இத்தகைய அபாய பயணத்திற்கு அஞ்சி பெரும்பாலான சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் அப்பேருந்துகளில் ஏறாமல் தனியார் கார் மற்றும் வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து தங்களது ஊர்களுக்கு சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகளில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இல்லாததால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே, நாமக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் ஊர்களுக்கு சென்றனர். அதுவும், தனியார் பேருந்துகளின் மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டனர்.