ராஞ்சி;
ரூ. 84 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பிலான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உட்பட 16 பேரை குற்ற்வாளிகள் என்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அறிவித்தது. எனினும் தண்டனை விவரங்களை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆனால், இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென இறந்ததால் தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் கடந்த 2 நாட்களாக தண்டனை அறிவிப்பை வெளியிடாத நீதிபதி சிவபால் சிங், வழக்கை மீண்டும் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.

இன்றைய தினமாவது தீர்ப்பளிக்கப்படுமா? என்பது இனிமேல் தெரியும்.இதனிடையே, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சிவபால் சிங், லாலு ஆதரவாளர்களால் கடும் கோபத்திற்கு ஆளானதே தண்டனை அறிவிப்பு தள்ளிப்போவதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
வியாழனன்று உறுதியாக தண்டனை அறிவிக்கப்பட்டு விடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதற்காக லாலுவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி இருந்தனர். அப்போது, லாலுவைப் பார்த்து, “உங்களை காப்பாற்ற சொல்லி நேற்று எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன; வரிசையாக உங்கள் நலம் விரும்பிகள் பலர் அழைக்கின்றனர்; அவர்கள் பெயரை நான் சொல்ல போவதில்லை; ஆனாலும் அவர்கள் உங்கள் நலத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.அப்போது, சிறையின் தான் அடைக்கப்பட்டுள்ள அறை மிகவும் குளிராக இருக்கிறது என்றும், தன்னை பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை” என்றும் லாலு தெரிவித்தார். அப்போது, “உங்களுக்கு தபேலா இல்லை; ஆர்மோனியம் வாசிக்க தெரியும் என்றால் ஏற்பாடு செய்கிறேன்; குளிருக்கு இதமாக வசித்துக் கொள்ளுங்கள்” என்ற நீதிபதி, “நீங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கும் நபர்களே போதும் தனியாக சிறையிலும் சிலரை சந்திக்க வேண்டாம்” என்று காட்டமாக கூறினார்.

தனது வயது முதிர்வைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று லாலு கூறியபோது, “நடிக்காதீர்கள் லாலு; உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க இருக்க வாய்ப்பு இல்லை; அப்போது நீங்கள் தானே முதல்வர்; நியாபகம் இருக்கிறதா இல்லையா?” என்ற நீதிபதி, “இன்று தீர்ப்பு விவரம் அளிக்கப்போவதில்லை, நீங்கள் சிறைக்கு செல்லுங்கள்” என்று கூறி விட்டார்.
அதன்தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையன்றும் தீர்ப்பு வழங்காத நீதிபதி, சனிக்கிழமையன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.