மே.பாளையம், ஜன. 5-
கப்பல் மூலம் எங்களை இலங்கைக்கு அனுப்பிவையுங்கள் என மேட்டுப்பாளையம்அகதிகள் முகாமை ஆய்வு நடத்த வந்த மத்திய அரசு அதிகாரிகளிடம் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வேடர் காலனி என்னும் பகுதியில் இலங்கை தமிழர் அகதிகளுக்கான முகாம் அமைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரின் பாதிப்பால் அங்கிருந்து தப்பி வந்த தமிழ் அகதிகளுக்காக கடந்த 1990 ஆம் ஆண்டு அரசு சார்பில் இம்முகாம் அமைக்கப்பட்டது. இம்முகாமில் தற்போது 244 இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 682 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான வசதிகள் குறித்தும், இலங்கையில் போர் ஓய்ந்து தற்போது அமைதி நிலவி வரும் நிலையில் மீண்டும் அங்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் இலங்கை தமிழர்கள் குறித்த விபரம் சேகரிக்க மத்திய அரசின் உயர் அதிகாரிகள் குழுவினர் வெள்ளியன்று இங்குள்ள அகதிகள் முகாமிற்கு வருகை தந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகதிகள் நல்வாழ்வு மற்றும் கண்காணிப்புத்துறையின் செயலர் எஸ்.கே.பரிடா தலைமையில் அத்துறையின் உயர் அதிகாரிகள் ஷிட்டிஷ் குமார், சுப்பிரமணியம், ரமேஷ் ஆகியோர் முகாமை சுற்றி ஆய்வு நடத்தியதோடு அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, மீண்டும் இலங்கை செல்ல விரும்புவோர் குறித்து பட்டியல் கேட்டபோது, இங்குள்ள 244 குடும்பங்களில் 25 குடும்பங்கள் இலங்கை திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்தனர். மேலும், தங்களை கப்பல் மூலம் அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏனெனில், விமானம் மூலம் செல்லும்போது எங்களது பொருட்கள் ஒவ்வொரு நபரும் சுமார் ஐம்பது கிலோ மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் நாங்கள் இதுவரை பாடுபட்டு சேர்த்த பொருட்களை அங்கு கொண்டு சென்றால் மட்டுமே இலங்கையில் வாழ இயலும். இலங்கையில் எங்களுக்கென்று ஏதுமில்லாத நிலையில் அங்கு சென்று பிழைப்பு தேடி வாழ்வாதாரத்தை உருவாக்கி கொள்ளும் வரையில் இங்கு சம்பாதித்து சேர்த்த பொருட்கள் மிக மிக அவசியம்.

எனவே, நாங்கள் எங்களது பொருட்கள் மற்றும் உடமைகளை சிக்கலின்றி எடுத்து செல்ல உதவும் வகையில் கப்பல் மூலம் எங்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய குழுவினரிடம் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை நிறைவேற்றும் பட்சத்தில் மேலும் பலர் மீண்டும் இங்கிருந்து இலங்கை செல்ல விரும்புவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இக்கோரிக்கை குறித்து கேட்டறிந்த அதிகாரிகள், இக்கோரிக்கைகள் தொடர்பாக பரிசிலனை செய்யப்படும் என உறுதியளித்தனர். மேலும், உங்களது அடிப்படை வசதிகள் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, மத்திய குழுவினருடன் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.