திருப்பூர், ஜன.5 –
கடன் சுமையால் தொழிலாளர்கள் உடலுறுப்புகளை விற்கும் கொடுமைக்கு முடிவு கட்ட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழனன்று திருப்பூரில் சம்மேளனத் தலைவர் கே.பி.கோபிகுமார் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் உள்படமாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் மாத ஊதியம், தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியத் தொழிற்சங்கங்கள் ஜனவரி 25ஆம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்பது என்றும், மேற்படி கோரிக்கைகளை விளக்கி தமிழகம் முழுவதும் விசைத்தறி தொழிலாளர்களைச் சந்திப்புக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் ஜவுளி கொள்கை காரணமாக தமிழகத்தில் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுச் சந்தை பாதிப்பினாலும் உற்பத்தி குறைந்து தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கின்றனர். சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைத்து விசைத்தறித் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியைக் குறைக்கவும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கவும், நலவாரியத்தில் விண்ணப்பித்துள்ள விசைத்தறி தொழிலாளர் கேட்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பணப்பயன் வழங்கவும், விசைத்தறி காப்பீட்டுத் திட்டத்தில் கல்வி நிதி பலனைப்பெற பயனாளிகள் வயது வரம்பு திருத்தத்தை நீக்கவும், தொழிலாளர்களுக்கு முன்பணம் அளித்து பின்னர் அநியாய வட்டி விதித்து தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தி வசூல் செய்யும் முதலாளிகள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கவும், விசைத்தறி கூடங்களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கவும், கூலி மற்றும் போனஸ் குறித்து இருதரப்பு ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்தவும், அமல்படுத்தாத நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: