ஈரோடு, ஜன. 5-
ஈரோட்டில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக ரூ.54 லட்சம் செலவில் 7 இடங்களில் சிக்னல் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் வியாழனன்று மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தொடக்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், சாலை விபத்தினை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களுக்கு ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் சிக்னல் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கிய சாலைகளான பெருந்துறை முதல் பவானி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையிலும், சித்தோடு, நசியனூர், காஞ்சிகோயில் பிரிவு போன்ற இடங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், இரண்டு இடங்களிலும் சிக்னல்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ரூ.25 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்க கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 இடங்களுக்கும் விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று சிக்னல்கள் அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சாலை விபத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.