தாராபுரம், ஜன. 4 –
தாராபுரத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் திடீரென வாபஸ் பெறப்பட்டதால் பள்ளி மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தாராபுரம் சர்ச்ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் பள்ளியில் கிராமப்புற மற்றும் நகர்புறத்தை சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு காலை 8 மணிக்கே சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. இதன்பின் மாலை 5.30 மணிக்கு சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவிகள் வீடு திரும்புகின்றனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவிகள் தாலுகா அலுவலக ருந்து நிறுத்தம் சென்று பேருந்தில் சென்று வருகின்றனர். இதற்கிடையே, பள்ளி முடிந்த பின்பு அனைத்து மாணவிகளும் சர்ச்ரோடு கார்னரில் உள்ள தாலுகா அலுவலக முக்கிய சாலையை கடந்து செல்ல வேண்டும். இவ்வழியாக கருர், பழனி, மதுரை, திண்டுக்கல் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள், நகர பேருந்துகள் மற்றும் இரு,நான்கு சக்கர வாகனங்கள் ஏராளமானவை கடந்து செல்வதால் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இவ்விடம் இருந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30மணி முதல் 5.30 மணி வரையிலும் இரு போக்குவரத்து காவலர்கள் சர்ச்ரோடு கார்னர் பகுதியில் மாணவிகள் சாலையை கடக்க ஏதுவாக போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், பெண்கள் பள்ளி என்பதால் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மகளிர் காவலர்களும் பள்ளி முன்பு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு உதவி செய்ய ஊர்க்காவல் படையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். இதனால் மாணவிகள் அச்சமின்றி சாலையை கடந்து சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 20நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார், மகளிர் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என அனைவரும் திடிரென திரும்ப பெறப்பட்டனர். தற்போது, அரையாண்டு விடுமுறைமுடிந்து மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், காவலர்கள் யாரும் இல்லாததால் மாணவிகள் சாலையை கடக்க இயலாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைகாணப்படுகிறது. ஆகவே, காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படும் முன்பு மீண்டும் இப்பகுதியில் போக்குவரத்து காவலர், மகளிர் காவலர் மற்றும் ஊர்க்காவல் படையினரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பணியில் அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: