பொள்ளாச்சி, ஜன. 3-
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து பணம், நகை மற்றும் காரை கொள்ளையடித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகில் உள்ள மன்றாம்பாளையம் மணியகாரர் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (78), இவரது மனைவி கற்பகம் மற்றும் மகன் பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் செவ்வாயன்று வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டிற்குள் நான்கு கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர், அவர்களை மிரட்டி ரூ,10 ஆயிரம் ரொக்கம், நகை, செல்போன், எல்இடி தொலைக்காட்சி பெட்டிமற்றும் கார் சாவியை பறித்துள்ளனர். இதன்பின் அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுதொடர்பாக நெகமம் காவல் நிலையத்திற்கு பிரகாஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின்பேரில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோவை, திருப்பூர் ஆகிய இருமாவட்ட சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்களை தேடும் பணியினை காவல்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் புதனன்று அதிகாலை பெரியபட்டி அருகே கொள்ளையர்கள் காரை நிறுத்திவிட்டு பேருந்தில் தப்பிச்செல்ல முயன்றபோது காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பிடிப்பட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து ஒரு நாள் முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தன் (22), கனகராஜ் (29), செல்வராஜ் (25) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதியைச் சேர்ந்த ஆனந்த் (26) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் ஏற்கனவே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு அதன் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட கொள்ளையர்களை வியாழனன்று பொள்ளாச்சி அமர்வு நீதிமன்றம் 2ல் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதன்பின் நீதிபதியின் உத்தரவின்படி அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.