திருப்பூர், ஜன.4-
திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் புதிய தார்சாலை போடும் பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், அந்த பகுதி முழுவதும் கடுமையான புழுதி ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறி வருகின்றனர்.

அவிநாசி – திருப்பூர் – அவிநாசிபாளையம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதில், திருப்பூர் நகரின் வடக்குப் பகுதியில் மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அவிநாசி சாலை புஷ்பா சந்திப்பில் இருந்து குமார் நகர், தீயணைப்பு நிலையம் வரை உள்ள பகுதி நீண்ட நாட்களாக விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் மற்றும் தொலைபேசி இணைப்பு குழாய்களை மாற்றி அமைத்து பழைய சாலையின் இருபக்க எல்லைகளையும் விரிவாக்கம் செய்யும் பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, மிக மோசமான குண்டும், குழியுமான இந்த சாலையில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் விபத்துகள் நேரிட்டு வாகன ஓட்டிகள் பலர் காயமடைந்து வந்தனர். ஆகவே, இந்த சாலை விரிவாக்கப்பணியை துரித கதியில் முடிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில் தற்போது இங்கு சாலை விரிவாக்கப் பணி பகுதி, பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் மட்டும் புதிதாக சாலை அமைக்கப்பட்டும், அதன் தொடர்ச்சியான பகுதிகள் மிகவும் மோசமாகவும் காணப்படுகின்றன. குறிப்பாக, புஷ்பா சந்திப்பு மற்றும் குமார் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் மிக மோசமான நிலை தொடர்கிறது. குமார் நகர் பகுதியில் தார்ச் சாலை அமைப்பதற்கு பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அங்கு ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் காற்றில் புழுதி பரவி அடர்த்தியாக புகை மூட்டம் போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறி, வாகனங்களை ஓட்டவதற்கே தடு
மாறும் நிலை உள்ளது. எனவே இச்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.