உதகை, ஜன. 4-
கோடநாடு எஸ்டேட் காவலாளிகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாட்டில் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் காவலாளி கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். மேலும், பங்களாவில் இருந்த சில பொருட்களும் கொள்ளை போயின. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்த நிலையில், முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் பலியானார்.

இதன்பின் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான், சந்தோஷ் சாமி, தீபு, சதீஷன், உதயகுமார், மனோஜ் சாமி, பிஜின், ஜித்தின் ஜாய், ஜம்ஷீர் அலி, மனேஜ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், மனோஜ் சாமி மற்றும் தீபு ஆகிய இருவரை தவிர மற்ற 8 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் கோத்தகிரி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கு கடந்த டிச.21ம் தேதி உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இதையடுத்து வியாழனன்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, அனைவரும் ஜன.18ம் தேதிநீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக, கோவை மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோஜ்சாமி மற்றும் தீபு ஆகிய இருவரும் பலத்தபோலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குஅழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அவர்களால் ஜாமின் நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாததால் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணைக்கு பின்பு இவர்கள் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.