கோவை, ஜன.4-
குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்கக்கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பொங்கல் போனஸ்சை இந்த ஆண்டு உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.வீரபத்திரன் தலைமை வகித்தார். அனைத்து துறை ஒய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.சந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.மதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, பி.பழனிச்சாமி, பரமசிவன், என்.சாரதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் கே.பழனிச்சாமி நிறையுரையாற்றினார். இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சி.சண்முகம் வாழ்த்தி பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அங்கப்பன், மாவட்ட பொருளாளர் எஸ்.சுசீலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார், மாநில பொதுச்செயலாளர் இ.மாயமாலை நிறைவுறையாற்றினார். இந்த தர்ணா போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.