“கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு ஆண்டுக்கணக்கில் சாதிச்சான்று வழங்காமல் அவர்கள் வாழ்வை முடக்கும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர்மீது கிரிமினல் வழக்கு தொடருவோம்” என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு எச்சரித்தார்.

 

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் காலங்காலமாக வசிக்கும் மலையின் சொந்தக்காரர்களான மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்க பல ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் நிர்வாகம் இழுத்தடிப்பதை கண்டித்தும், மனு கொடுத்துள்ளவர்களுக்கு உடனடியாக சாதிச்சான்றுவழங்கக் கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் வியாழனன்று (ஜன 4)துவங்கியது.

இதனை துவக்கி வைத்துப் பேசிய டில்லிபாபு, “தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத விதிகளை சொல்லி விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுக்கும் கோட்டாட்சியரும், அதிகாரிகளும், 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சாதிச்சான்று வழங்கப்படு வதாக மலைமக்கள் கூறுகின்றனர். ஏராளமான ஊழல், முறைகேடு இதில் நடைபெறுகிறது” என்றார்.“வேண்டுமென்றே இல்லாத சட்டங்களைக்கூறி நீதிமன்றங்கள், மத்திய, மாநில அரசு சட்டங்களை மதிக்காமல் மலைமக்களை ஏமாற்றி பணம் பிடுங்க வழிகோலும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது மலைவாழ் மக்கள் சங்கம் கிரிமினல் வழக்கு தொடரும் எனவும், முறையாக போராட்டத்திற்கு அனுமதி பெற்றும் சாமியான, சேர் கூட போடவிடாமல் வெயிலிலே எங்களை வதைத்து அடாவடியாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள்தான் இங்கு மலைமக்களுக்கு, பெண்களுக்கு ஏதாவது நேர்ந்தால் பொறுப்பேற்க வேண்டும் எனவும்” பி.டில்லிபாபு கண்டன உரையில் தெரிவித்தார்.

கல்வராயன்மலை சங்கச் செயலாளர் வி.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், ஏ.வி.ஸ்டாலின்மணி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.சரவணன், மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி, மலைவாழ் இளைஞர் சங்க மாநில பொருளாளர் வி.ஏழுமலை உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும் வாலிபர்சங்க மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாணவர் சங்க தலைவர் எம்.சிவக்குமார், எம்.கே.பழனி, சிபிஎம் வட்ட செயலாளர்கள் பி.மணி, டி.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கல்வராயன்மலை சங்கத் தலைவர் ஏ.செல்வராஜி, பொருளாளர் எல்.கோவிந்தன், ராமன், சின்னசாமி, சடையன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மலைமக்கள் போராட்டத்தில் காத்துக் கொண்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைபிற்பகலுக்குப்பின் சமையல் செய்ய ஏற்பாடுகள் செய்ய முற்பட்ட போது போராட்ட இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி கோட்டாட்சி யர்மல்லிகா பி.டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்களுடன் பேசியபின் அங்கேயே போராட்ட இடத்தில் ஒலிபெருக்கியில் ‘மனு கொடுத்துள்ளவர்களுக்கு எந்த தாமதமுமில்லாமல் தகுதியானவர்க ளுக்கு சாதிச்சான்று வழங்கப்படும்’ என உறுதி கூறியபின் போராட்டத் தலைவர்கள் கோட்டாட்சியர் அறைக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் தலைவர்கள் முன்னிலையில் 13 பேருக்கான மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) சாதிச்சான்று வழங்கப்பட்டது. மேலும் 320 பேருக்கான சாதிச்சான்று எதிர்வரும் பிப்ரவரி 2ஆந் தேதிக்குள் 30 நாட்களில் வழங்குவது என்றும், இன்று போராட்டத் தின்போது சாதிச்சான்று கேட்டு மனு கொடுத்துள்ளவர்களுக்கு இக்கல்வி ஆண்டு துவங்கும் ஜீன் 2018க்குள் கொடுப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இதனை வெளியே போராட்டத்தில் ஈடுட்டிருந்த மலைவாழ்மக்களிடம் டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள் விளக்கிக் கூறினர். இதன்பின் காத்திருப்புப் போராட்டம் வெற்றியுடன் முடிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: