ஈரோடு, ஜன.4-
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த அனிபா என்பவரின் மகன் இப்ராஹிம் (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன் என்பவரின் மகள் ஹர்ஷியாவும் (20) காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதனன்று ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைத்தனர். இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக விசாரிப்பதற்காக இரு தரப்பினரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து வியாழனன்று இருதரப்பை சேர்ந்தவர்களும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தபோது தீடீரென இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். அப்போது, சமாதானம் பேச வந்த மனித நேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் என்பவரை கூட்டத்தில் ஒருவர் மான் கொம்பை கொண்டு குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடைபெற்றதால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: