மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பீமா கோரேகன் கிராமத்தில் கோரேகான் போரின் 200 ஆவது ஆண்டு நினைவு தினம் ஜனவரி 1 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த காவி கும்பல் தலித் மக்கள் மீது கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.மேலும் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து தலித் மக்கள் இன்று மாநிலம் முழுவதும் அழைப்பு விடுத்ததின் பேரில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் முழுகதவடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே தலித்துகள், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த அமைப்பான ப்ரேனா அபியன்(Prerna Abhiyan) கோரேகான் போரின் 200 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி எல்கர் பரிஷத் என்ற தலைப்பில் திங்களன்று புனேயில் நடைபெற்றது. இதில் தலித், ஆதிவாசி, கிருஸ்துவர்கள், முஸ்லீம் அமைப்புகளை சேர்நத் 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி டாக்டர்.பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, ஒமர் காலித், சோனி சோரி, உல்கா மகாஜன், பிரஷாந்த் தோனதா, ராதிகா வெமுலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது பேசிய ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா,
சமுதாயத்தில் தலித் மக்கள் தங்களது உரிமைகளை பெற கூடாது என நினைக்கும் சாதியக் கும்பல்களால் தான் ரோகித் கொல்லப்பட்டார். இந்தியர்களுக்கான நீதி என்பது சாதியின் அடிப்படையில் மாறுபடுகிறது. அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, பண்டாரு தத்தத்ரேயா மற்றும் பாஜக எம்.எல்.சி ராமசந்திர ராவ் ஆகியோர் தனது எனது மகனை கொன்றனர். பாசிசம் மற்றும் சாதிக்கு எதிரான ஒரு தேசிய திட்டத்தை உருவாக்கி தொடர்ந்து போராட வேண்டும் என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஒமர் காலித் பேசுகையில், வகுப்புவாதம், வன்முறை போன்ற பிரச்சனைகளை விட பசி, வறுமை, வேலையின்மை, பொதுவான வளங்களை அணுவதில் உள்ள பிரச்சனைகளே அதிகளவு உள்ளது. வகுப்புவாத சக்திகளுக்கு சேவை செய்வதற்காக வரலாறு திரிக்கப்பட்டிருக்கிறது. அது சரியான வடிவத்தில் வழங்கப்பட வேண்டும். ஏழை மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். அவர்களின் நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் வத்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானி  கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச அரசுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடா வேண்டும். குஜராத்தில் பாஜகவின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். வரும் 2019 தேர்தலில் பாஜகவின் இடத்தை இரு இலக்க எண்ணிக்கையில் குறைய செய்வோம். வருகின்ற மக்களவை தேர்தலில் கார்ப்பரேட் – பாசிச ஆட்சியை முறியடிக்க அம்பேத்கரின் பாடங்கள் எங்களுக்கு உதவி புரியும் என்றார்.

கோரேகான் போரின் 200 ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்ட போது தலித் மக்கள் மீது காவி கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எல்கர் பரிஷ்த் நிகழ்ச்சியை இடையூறு செய்து, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்?

தலித் மக்களின் உறுதியையும், அணிசேரலையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களே எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனக்கு புரிந்தவரை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் தான் இதை செய்துள்ளனர். இந்த அமைப்புகள் பிராமணியத்தை மிகவும் மோசமான வடிவத்தில் எடுத்துரைக்கும் நவீன பேஷ்வாக்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன் நமது மூதாதையர்கள் பெஷ்வாக்களுக்கு எதிராக போராடினர். தற்போது என தலைமுறை தலித்துகள் இந்த புதிய நவீன பெஷ்வாக்களுக்கு எதிராக போராடி வருகிறோம். ஏன் கோரேகான் போர் நினைவு தினத்தை தலித் மக்கள் அமைதியாக நினைவுகூர முடியவில்லை? தலித் மக்களின் உறுதியை சகித்துக்கொள்ள முடியாததால் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஏன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புது பேஷ்வாக்கள் என கூறுகிறீர்கள்? எதை வைத்து பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி பிராமணியத்தை மீண்டும் உயிர் பெற செய்யும் ஆட்சி என்கிறீர்கள்?

சாதி அடிப்படையிலான பிராமணியத்தை பாதுகாப்பதே பெஷ்வா அரசின் கொள்கை. இதை தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் செய்கிறது. இந்து ராஷ்டிரா என்பதே உயர் சாதியினரை பாதுகாப்பதும், மேலாதிக்கத்தை ஊக்குவிப்பதுமே. கார்ப்பரேட்களையும், பிராமணியங்களுக்கும் சேவை புரிவதற்காக மோடி அரசு தாராளமைக்கொள்கையை பின்பற்றி வருகிறது. அவரது குஜராத் மாடல் என்பது பிராமணிய மாடலே. தலித், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு இந்த மாடலில் இடம் இல்லை. இவர்களின் உரிமை பற்றி பிராமணிய அடக்குமுறையாளர்களுக்கு எந்த புரிதலும் இல்லை.

பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத் என்ற பெயரில் சாதாரண மக்கள் தாக்கப்படுகிறார்கள். தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடக்கும் பொழுதெல்லாம், மோடி அவர்கள் முதலை கண்ணீர் வடித்தபடி, அடக்குமுறையை பின்பற்றுபவர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறார். இவர்களை புது பெஷ்வாக்கள் என்று கூறாமல் பிறகு எப்படி கூறுகிறது?

தலித் இயக்கம் புதிய உத்வேகத்துடன் செயல்பட என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என கருதுகிறீர்கள்?

தலித் இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். வெறும் கோஷங்கள் மீது மற்றும் கவனம் செலுத்தாமல், உண்மையான, பொருளாதார பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்.ரோகித் வெமுலா சம்பவத்திற்கு பிறகு தலித் இளைஞர்களின் உறுதி ஆச்சிரியமளிக்கும் விதமாக உள்ளது. இந்த உறுதியை தலித் மக்களின் பொருளாதார மேம்பாடு போராட்டத்திலும் நிலைப்படுத்த வேண்டும். சாதி அமைப்புக்கு எதிரான போராட்டம் என்பது சாதி மற்றும் வகுப்புவாத அடக்குமுறை என இரண்டும் எதிரானதாகும். அதாவது தாராளமயத்தால் ஏற்பட்டிருக்கும் பேரழிவுக்கு எதிரான போராட்டம். உரிமை, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளியுறவு கொள்கை, மத நல்லிணக்கம் குறித்து ஏன் தலித் மக்களால் பேச முடிவதில்லை? தலித் இயக்கம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வாக்கு வன்மத்தில் இருந்து விடுபட்டு உண்மையான பொருளாதார பிரச்னைகள் மீது கவனம் செலுத்த முடியும்.

தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராட என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

ராஷ்டிரிய தலித் அதிகார் மன்ச் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். குஜராத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித் மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பிராமணியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக போராடுவது தான் எங்கள் கொள்கை. பிராமணியத்தின் மீது மட்டும் அல்லாமல் ஆட்சியில் உள்ள பிரச்சனைகள், ஊழல், கார்ப்பரேட் கொள்ளை, விவசாயிகள் தற்கொலை, பண வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் முன்னெடுத்து போராடுவோம். சமூக நீதிக்கு மட்டும் அல்லாமல் ஏழை மற்றும் தலித் மக்களுக்கான உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். தலித் இயக்கம் இனி இந்த பிரச்சனைகளை முன்னெடுத்து போராடும். முதலில் இதை குஜராத்திலும் பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்துவோம்.

http://www.hindustantimes.com/pune-news/abhiyan-pledges-long-fight-against-neo-fascism-during-elgar-conference-in-pune/story-58AdHQdkcBPKZwFzwdU4uI.html

https://scroll.in/article/863588/they-are-scared-of-dalit-assertion-jignesh-mevani-speaks-on-bhima-koregaon-violence

தமிழாக்கம் : ஆர்.சரண்யா

Leave a Reply

You must be logged in to post a comment.