புதுதில்லி;
குறைந்தபட்சம் 500 முதல் 1000 ரூபாய் கூட சேமிப்பில் வைக்க முடியாத வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் ரூ. 2 ஆயிரத்து 320 கோடி அளவிற்கு அபராதம் வசூலித்துள்ளது.சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இந்த வகையில்தான் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை ரூ. 2 ஆயிரத்து 320 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன. இதில், பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் 1,771 கோடி ரூபாய் அபராதமாக கிடைத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு ஜூலை – செப்டம்பர் காலாண்டில் பல்வேறு வகைகளில் கிடைத்த நிகர வருவாய் 1,581 கோடி ரூபாய். ஆனால், அதைக் காட்டிலும் அதிகமான தொகையை அபராதம் மூலமாக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வருவாய் 3,586 கோடி ரூபாய் என்றால், அதில் ஏறக்குறைய பாதி தொகை அபராதம் மூலம் ஈட்டப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில், பாரத ஸ்டேட் வங்கி மட்டும்தான், அவரவர் வசிக்கும் பகுதிகள் அடிப்படையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்து கொள்ளை வசூலை நடத்தி வருகிறது. குறிப்பாக, மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 3000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்பது, பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறை. இதுபோல் புறநகர்களில் 2,000 ரூபாய், கிராமப் பகுதிகளில் 1,000 ரூபாய் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும்.

இதற்கு கீழ் இருப்பு இருந்தால் 30 முதல் 100 வரை இருப்புத் தொகை குறைவுக்கு ஏற்ப அபராதம் விதித்து வசூலித்து வருகிறது.பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை, குறைந்தபட்ச இருப்பு இல்லாதவர்களிடம் அபராத தொகையாக ரூ. 97 கோடியே 34 லட்சமும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ. 68 கோடியே 67 லட்சமும், கனரா வங்கி ரூ. 62 கோடியே 16 லட்சமும் அபராதம் மூலமாக வருமானம் பார்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.