சிவகாசி;
பட்டாசுத் தொழிலையும், அதை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் சிஐடியு- பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிவகாசியில் புதனன்று எழுச்சிமிகு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக விளங்கி வரும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க கோரி சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று சிவகாசியில் மாபெரும் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகே துவங்கிய எழுச்சி மிக்க பேரணியை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நிறை வடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு-பட்டாசு தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்
தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா பேசினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முடிவில் கே.முருகன் நன்றி கூறினார். வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரவி, சிஐடியு பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜே.லாசர், எஸ்.பாலசுப்பிரமணியன், ஏ.சீனி வாசன், ஆர்.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.பாண்டி,எம்.பிச்சைக்கனி, கே.கண்ணன், சிஐடியு கன்வீனர் ஆர்.சுரேஷ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.முருகேசன், இ.பழனி ஆகியோர் உட்பட பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் இப்போராட் டத்தில் உத்வேகத்துடன் கலந்து கொண்டனர்.

பட்டாசு வெடிப்பதால் தில்லி மாசுபட்டதா?                                                                                        போராட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் முக்கியமான தொழிலாக பட்டாசுத் தொழில் உள்ளது. இதை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ள னர். ஏற்கனவே பண மதிப்புநீக்கம்,ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சீனப் பட்டாசு இறக்குமதி ஆகியவற்றால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி ஒரு காலத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்பட்டது. தற்போது, அப்பெயர் சிவகாசியிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது.

சிவகாசி பட்டாசு தற்போது, சீனப் பட்டாசாகி விட்டது. இதற்கு காரணம் மத்திய அரசின் கொள்கை. தாராள உலக வர்த்தகம் என்பது தங்குதடையின்றி எங்கு வேண்டு மானாலும் வணிகத்தில் ஈடுபட லாம் என்பதுதான். அதாவது, எந்த ஒரு பொருளையும் எங்கு
வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளியின் உயிர் போனால், தொழிலாளிக்காக சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. அதேநேரத்தில் இத்தொழிலே தடை செய்யப்பட்டால், தொழிலாளியின் நிலை என்ன வாகும்? எனவே, இத்தொழிலை பாதுகாக்கவே சிஐடியு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் காற்று மாசுபட்டுள்ளது உண்மை. வழக்கமாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் யாரும் வெளியே நடமாட முடியாது. ஆனால் அந்த மாசு, தற்போது 4 முதல் 6 மாதங்கள் அளவிற்கு நீடிக்கும் என்ற
நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தினத்தில் பட்டாசு வெடிப்பதால் அந்த மாசு ஏற்படவில்லை.

நாள்தோறும் புதிய, புதிய பல லட்சக்கணக்கான கார்கள் தில்லியில் அதிகரித்து வருகின்றன. ஏராளமான ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகள் அங்கு உருவாகி உள்ளன. மேலும், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரி யானா ஆகிய மாநிலங்களில் பயிர்
அறுவடை முடிந்ததும், அந்த வயல்களில் மீதமுள்ள பயிர்களை எரியூட்டுவதாலும் காற்று மாசு ஏற்படுகிறது.

இந்தப் பின்னணியில் நீதி மன்றம், பட்டாசுத் தொழில் மற்றும் அதை நம்பி வாழும் 8 லட்சம்
தொழிலாளர்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.எனவே, இத்தொழிலை பாது காக்கவும் உச்சநீதிமன்றத்தில் மாவட்டத் தலைவர் எம்.மகா லட்சுமி பெயரில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். எனவே உச்சநீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் போன்றவை தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த டிச.26 முதல், கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் அமைச்சர்கள் இப்பிரச்ச னையை தீர்க்க உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர்களை பாதுகாக்க, ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். எங்களது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இதற்காக குரல் கொடுப்பார்கள்.பட்டாசுத் தொழிலாளரின் வாழ்வாதாரப் பிரச்சனையை, ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனையாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

வணிகர்கள் ஆதரவு
ஏ.எம்.விக்கிரமராஜா பேசுகையில், “இப்போராட்ட மானது 8 லட்சம் பட்டாசு தொழி லாளர்களுக்கு மட்டுமானது அல்ல. இத்தொழிலுக்குப் பின்னால், 2 லட்சம் வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களும் உள்ளன. மேலும் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களும் இத் தொழிலைச் சார்ந்து உள்ளனர். இத்தொழில் தடை செய்யப் பட்டால், ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, வணிகர் சங்கங்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன” என்றார்.

“இத்தொழிலின் மூலம் அர சுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி வரு
வாய் வருகிறது. எனவே நீதிபதிகள், இவையனைத்தையும் கருத்தில்
கொண்டு நல்ல முடிவுகளை சொல்ல வேண்டும். இத் தொழிலை முடக்க நினைக்கக் கூடாது. நல்ல குடிநீர் ஓடிய ஆறு, ஏரி, குளங் களில் தற்போது சாக்கடை ஓடு கிறது. அதில் மீண்டும் நல்ல தண்ணீர் ஓடிடவும் நீதிபதிகள் உத்தரவிட வேண்டும். பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குபவர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள்.

மத்திய மாநில அரசுகள் தொழில்களை அழித்து வேலைவாய்ப்பை கெடுக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள குப்பைகள், அட்டைக் கழிவுகளை அகற்றி, அதன் மூலம் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், நாடு சுத்தமடைகிறது. ஆனால், குப்பைக் கிடங்குகளில் தீ எரிந்து கொண்டே உள்ளது. இதனால், காற்றில் மாசு ஏற்படாதா?” என்றும் விக்கிரமராஜா கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.