திருப்பூர், ஜன. 2 –
உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை கருத்துகள் பற்றி மாவட்ட ஆட்சியர் கூட்டிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்தனர்.

உள்ளாட்சி தேர்தல் வார்டுகள் எல்லை மறு வரையறை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. தமிழகத்தில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை வரைவுக் கருத்துருக்கள் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்க இக்கூட்டம் நடத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் சில பகுதிகளில் திடீரென வார்டுகள் மறுவரையறை கருத்துருக்கள் வெளியிடப்பட்டன. சில பகுதிகளில் அன்றைய தினம்வெளியிடாமல், அதன் பிறகு தனித்தனியாக ஆங்காங்கே வெளியிடப்பட்டது. எனினும், எல்லா உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை குறித்தும் ஜனவரி 2ஆம் தேதிக்குள் (செவ்வாய்) அரசியல் கட்சிகளும், பொது மக்களும் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. முழு விபரத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல், குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் கூட தரப்படாமல் அவசர கதியில் வெளியிடப்பட்ட இந்த மறுவரையறைகள் குறித்து அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அதிருப்தியைப் பல்வேறு அரசியல் கட்சியினர் வெளிப்படுத்தினர். மேலும் மறு வரையறை தொடர்பான மாற்று ஆலோசனைகள், கருத்துகளையும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தெரிவித்தனர். இத்துடன் மறுவரையறை தொடர்பாக முழுமையாக கவனித்து உரிய கருத்துகளைத் தெரிவிக்க உரிய கால அவகாசம் தேவை என்றும் வலியுறுத்தினர். இது குறித்து தமிழ்நாடு வார்டு மறுவரையறை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முத்துக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.