மே.பாளையம், ஜன.2-
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாமிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி நதி கரையோரத்தில் உள்ள தேக்கம்பட்டியில் நாளை (டிச.4) கோவில் யானைகளுக்கான சிறப்புபுத்துணர்வு நலவாழ்வு முகாம் துவங்கவுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த ஐந்தாண்டுகளாக மேட்டுப்பாளையத்தில் இம்முகாம் நடைபெற்று வந்த நிலையில் 6 ஆவது ஆண்டாக மீண்டும் இங்கு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

முகாம் துவங்க ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. முகாம் அமையவுள்ள சுமார் ஆறு ஏக்கர் நிலம் சுத்தப்படுத்தப்பட்டு யானைகள் கட்டி வைக்கும் இடங்கள், அதன் பாகன்கள் தங்கும் கூடாரங்கள், உணவுக்கூடங்கள், ஆற்றங்கரையோரம் யானைகளை குளிக்க வைக்கவும் அவற்றை நடைப்பயிற்சிக்கு கொண்டு செல்லும் பகுதிகளும் அதற்கான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. கோவில் யானைகள் பராமரிக்கப்படும் முகாமிற்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் முகாமை சுற்றி இரண்டு அடுக்குகளாக சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முகாம் நடைபெறவுள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமை சுற்றி ஆறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு அதிக வெளிச்சம் பாய்ச்சும் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவில் யானைகள் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் வரவிருக்கிறது. வரும் யானைகளின் எடையை அளவீடு செய்து முகாமிற்குள் அனுமதிக்கும் ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முகாம் வரும் தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் நடைபெறும் என கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: