கோவை, ஜன.2-
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு செய்யும் மத்திய அரசின் மசோதாவானது போலி மருத்துவர்களையே உருவாக்கும் எனக்கூறி செவ்வாயன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆவேச ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, புதியதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், இதற்குகடும் எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, செவ்வாயன்று கோவையில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையிலும் காலை 9 மணி முதல் 10 மணி வரை அரசு மருத்துவர்கள் ஓரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதன்பின், இந்திய மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய மருத்து கவுன்சில் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்த நிலையில் அதை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்து அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆயுஷ் டாக்டர்கள் 6 மாதம் பயிற்சி எடுத்தால் அலோபதி மருத்துவம் பார்க்கலாம் என புதியமசோதாவில் இருக்கிறது. இது போலி மருத்துவர்களை உருவாக்கும். இதேபோல், தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். ஆகவே, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.  இதேகோரிக்கைகளை முன்வைத்து பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர் ராஜா தலைமையில் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:
இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் 450க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், கணியாம் பூண்டியில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலக கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் முழு நாள் மருத்துவர்கள் பணிசெய்யவில்லை. அரசு மருத்துவமனையிலும் புறநோயாளிகள் பிரிவில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டும் சிகிச்சை அளிப்பதாக அறிவித்து எஞ்சிய நேரத்தில் வேலைநிறுத்தம் செய்தனர். உயிர்க்காக்கும் அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கெனவே விலக்கு
அளிக்கப்பட்டு இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதால் நோயாளிகள் கடும் பாதிப்பைச் சந்திக்கவில்லை.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்க திருப்பூர்கிளை தலைவர் டாக்டர் நசுருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவர் சங்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 450 மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளார்கள். சுமார் 100 தனியார் மருத்துமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ கழகம் என்ற பெயரை மாற்றி தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்துகிறார்கள். அதில் தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் ஏழை எளிய மாணவர்களுக்கு வாய்ப்புகள் பறிபோகும். அதுமட்டுமின்றி ஆணையத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்படும் பதவிகள் குறைவாகவும், நியமனம் செய்யப்படும் பதவிகள் அதிகமாகவும் இருக்கும். இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் படித்துவரக்கூடிய மருத்துவர்கள் இந்தியாவில் எந்த விதமான தகுதி தேர்வும் இல்லாமல் பணியாற்றலாம் என்பது முற்றிலும் ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேலம்:
இதேபோல், மத்திய அரசின் புதிய மசோதவை கண்டித்து சேலத்தில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து புதிய மசோதவை கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய மருத்துவ அசோஷியேசன் சேலம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு:
இதேகோரிக்கைகளை முன்வைத்து ஈரோட்டிலும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் மத்திய அரசின் புதிய மசோதவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.