கோவை, ஜன.2-
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை மூடும் திட்டம் இல்லை என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்தார்.

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக இருந்த சசிக்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்தில் மண்டல பாஸ்போர்ட்அலுவலராக இருந்த ஜி.சிவக்குமார், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் செவ்வாயன்று பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை மூடப்பட உள்ளதாக வதந்திகள் பரவின. இதுபோன்ற எந்த திட்டமும் கிடையாது. அடிப்படை ஆதாராமில்லாத வகையில் இந்த வதந்தி பரப்பப்பட்டது. மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கோவையில் தொடர்ந்து செயல்படும். தற்போது மாநகராட்சி வாடகைக் கட்டிடத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்படுகிறது. இதற்கு சொந்தக் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்த பின்னர், சொந்தக் கட்டிடம் கட்ட முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, காவல் துறை சரிபார்ப்பு (போலீஸ் வெரிஃபிகேஷன்) படிவங்கள் தற்போது காகிதங்களில் உள்ளன. இவற்றை முழுமையாக கணினியமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காவல் நிலையங்களுக்கு டேப்லட் (சிறு மடிக்கணினி) வழங்கப்படும். அதில் பிரத்தியேக செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் காவல் துறை சரிபார்ப்பு விவரங்கள் பதிவு செய்யப்படும். டேப்லட் மூலமாகவே புகைப்படம் எடுப்பது, எலெக்ட்ரானிக் கையொப்பமிடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.  தற்போதைய முறையில் காவல் துறை சரிபார்ப்பு சரிசரியாக 19 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. புதிய முறை மூலம் 3 அல்லது 4 நாட்களில் இந்தப் பணி நிறைவடையும். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த புதிய முறை அமல்படுத்தப்படும். மேலும், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன. தலைமை அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவையைப் பெறும் வசதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக திருப்பூர், நாமக்கல் தலைமை அஞ்சல் நிலையங்களிலும் பாஸ்போர்ட்சேவை வசதிகள் தொடங்கப்படும். பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு வழக்கமாக 25 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் விலாசம், தேசியம், குற்றச் செயல்களைச் சரிபார்த்தல் ஆகியவற்றுக்காக காவல் துறை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காவல் துறை சரிபார்ப்புதான் அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறது. கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை சராசரியாக 19 நாட்கள் காவல் துறை சரிபார்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சேலம் புறநகர் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இது 30 நாட்களாகிறது. அதேசமயம், நீலகிரி மாவட்டத்தில் 10 நாட்களில் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து விடுகின்றன. ஆகவே, காவல் துறை சரிபார்ப்பு பணிகளை விரைவாக மேற்கொள்வது, தேவையற்ற கேள்விகளைத் தவிர்ப்பது தொடர்பாக, காவல் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், கல்வி நிலையங்களில் பாஸ்போர்ட் மேளா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 33 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை இருந்தாலும் கூட, தினமும் சராசரியாக 950 பாஸ்போர்ட்களை தயார் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். தட்கல் முறையிலான பாஸ்போர்ட் 3 நாட்களில் வழங்கப்படுகிறது. அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு (அ) ரேஷன் கார்டு ஆகியவை இருந்தால், கூடுதல் கட்டணமின்றி சாதாரண முறையிலேயே 3 அல்லது 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தையும் கடந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. பொதுமக்கள் தங்களது குறைகள், பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காகவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் 9487992991 என்ற செல்போன் எண்ணை வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்டால், உரிய தீர்வு காணப்படும்.

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டில் 1,82,751 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து, 1,73,147 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.