கோவை ஜன 2-
பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், சிரமம் ஏற்படுத்தம் வகையில் வார்டு பகுதிகளை மாற்றியதாக கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சூலூர் வட்டம்கருமத்தம்பட்டி பேரூராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பராயன்புதூர் பகுதி மக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி பேரூராட்சி 4-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்படி வார்டு 4 என்பது சுப்பராயன்புதூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய வரைவு வாக்காளர் பட்டியலில், பழைய 4-வது வார்டு சுப்பராயன்புதூர் என்பதற்குப் பதில், வார்டு எண்.4 செகுடந்தாளி என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னர் செகுடந்தாளி பகுதி 3-வது வார்டில் இருந்தது. சுப்பராயன்புதூர் பகுதியில் வார்டு அலுவலகம் இருந்ததால், பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்க வசதியாக இருந்தது. ஆனால், செகுடந்தாளி பகுதிக்குச் செல்வதென்றால் 5 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். மேலும், பேருந்து போக்குவரத்தும் போதுமான அளவுக்கு கிடையாது. இதனால் நிர்வாகச் சிக்கலுடன், பொதுமக்களும் சிரமப்படுவர்.

பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட யாரிடமும் கருத்து கேட்காமல், வார்டு வரையறை செய்துள்ளனர். எனவே, புதிய வரையறையை நீக்கம் செய்து, முன்புபோல வார்டு எண்.4 சுப்பராயன்புதூர் என்றே மாற்றி, வரைவு வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.