திருக்கோவிலூர் அருகே தலித் இளைஞர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலையும், இதில் 2 பேர் உயிரிழந்ததையும், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் கோமாவில் இருப்பதையும் விபத்து எனக்கூறி உண்மையை மூடிமறைக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கிருபாநிதி, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீரமணி, 8ஆம் வகுப்புவரை படித்துள்ள கோபி ஆகியோர் டிச. 31 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் அக்கிராமத்திலிருந்து பக்கத்து கிராமமான ஆதிச்சநல்லூர் செல்லும் வழியில் உள்ள முருகன் கோவில் வேல் உள்ள இடத்தினருகே மர்மமான முறையில் தலையில் கடும் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்துள்ளனர்.

அவ்வழியாக வந்த தனியார் மினி பேருந்தில் வந்தவர்கள் இதனைப்பார்த்து கிராமத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஓடிவந்த உறவினர்களும், ஊர்மக்களும் சுயநினைவின்றி கிடந்த மூவரையும் இருசக்கர வாகனங்களில் தூக்கிச் சென்று குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பின் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கிருபாநிதி உயிரிழந்துள்ளார்.

பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரில் வீரமணி சிகிச்சையின்போதே சுயநினைவு திரும்பாமலேயே இறந்துள்ளார். தற்போதுவரை சுயநினைவு திரும்பாத நிலையில் கோபி சிகிச்சையில் உள்ளார். அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.

இக்கொடூர சம்பவத்தை கேள்வியுற்று செவ்வாயன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வேல்மாறன், எம்.செந்தில், வட்டச் செயலாளர்கள் எம்.முத்துவேல், ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாதர் சங்க துணைச் செயலாளர் வே.உமாமகேஸ்வரி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சிறீபத், வழக்கறிஞர் ச.ஜீவானந்தம், ஜீவாராஜா உள்ளிட்டோர் நேரடியாகக் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டோரின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

திட்டமிட்டு படுகொலை
நடந்துள்ள சம்பவத்தை நேரில் ஆய்வு செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள் , “சாதி ஆதிக்க வெறியர்களால் திட்டமிட்டு இப்படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. கொலையான கிருபாநிதி, வீரமணி இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை விரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வலுவாக நம்பப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும், குழந்தைகளைப் பறிகொடுத்துள்ள இரு குடும்பத்தினருக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவியும், சுய நினைவில்லாமல் உள்ள கோபியை சென்னைக்கு அழைத்துச் சென்று சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் மருத்துவ செலவுகளை மாவட்ட நிர்வாகமே ஏற்று உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொலையானோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், கோபியின் உயர் சிகிச்சைக்கான செலவுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்று உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வழக்கை விபத்து என மூடிமறைக்க முயற்சிக்காமல் கொலைவழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்யும்வரை இறந்தவர்களின் உடல்களை பெற முடியாது என்று கிராம பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.