சேலம், ஜன.2-
மேட்டுரில் இருந்து ஆத்தூர் செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்து வரும் நிலையில், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாதது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுரில் இருந்து சேலம், ஆத்தூர், வாழப்பாடி, கள்ளகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுரில் இருந்து ராட்சத குழாய்கள் முலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது போதிய அளவிற்கு பருவ மழை பெய்யாததால் மேட்டுர் அணையின் குடிநீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மேட்டுரில் இருந்து ஆத்தூருக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது. சேலம் மரவனோரி பொன்னமாபேட்டை செல்லும் பாதையில் ராட்சத குடிநீர் குழாய் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் உடைந்தது. இதனால் குடிநீர் 10 அடி உயரம் வரை எழுப்பி வெளியேறிக் கொண்டிருந்தது. மாநகராட்சி சார்பில் உள்ளுர் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பிரதான குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு குடிநீர் சாக்கடையில் வழிந்தோடியபோதும், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகியும் எந்த ஒரு அதிகாரியும் நேரில் வந்து பார்க்காதது பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏறப்படுத்தியுள்ளது.

மேலும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால்தான் குழாய் உடைந்தது எனவும், அந்த குழாயில் மேலும் பல விரிசல்கள் உள்ளதால் மீண்டும் அந்த குழாய் உடைய வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.