திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல்முதலம்பேடு ஊராட்சிக்குச் சொந்தமான சுமார் 23 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கதயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் அக்கிராம மக்கள் கடந்து ஒரு வருடமாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.கடந்த டிச. 8 அன்று நடந்த போராட்டத்தின் போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பொது மக்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொள்ளலாம் எந்த ஆட்சேபனையும் இல்லை. இதற்கு எந்தத் தடையும் இல்லை என்று வட்டாட்சியர் மக்களிடம் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் எப்போதும் அகற்றப்படும் என பொது மக்கள் கேட்டதற்கு “ பல தேதிகள் கொடுத்துவிட்டோம், இருந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.மீண்டும் ஒரு தேதியை கொடுக்க அதிகாரிகளாக உள்ள எங்களுக்கே வெட்கமாக உள்ளது’’ என்று சொல்லிவிட்டு, எது எப்படியிருந்தாலும் அடுத்த ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

அவ்வாறு கூறி ஒரு மாத காலம் ஆகியும் வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாகச் செங்கல் சூளை நடத்துபவர்கள் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் மின் கம்பங்கள் அமைத்து இரவு பகல் எனச் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தடுக்க வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆடு, மாடுகளை மேய்க்க இடமில்லாததால் வட்டாட்சியர் வாக்குறுதி அளித்ததின் பேரில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் தங்களின் கால்நடைகளை ஒட்டிக்கொண்டு ஜன.2 அன்று காலை அந்த நிலத்திற்குள் சென்றனர்.அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தடுத்து சமாதானம் செய்தனர்.

பின்னர் செங்கல் சூளை உரிமையாளர் மகன் கணேஷ் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் எம்.சி.சீனாவைப் பார்த்து “இதற்கெல்லாம் காரணம் நீதான். உன்னை வெட்டாமல் விடமாட்டேன்’’ என்று மிரட்டினார். இதனால் பொதுமக்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வட்டாச்சியர் பேச்சு நடத்தினார். வழக்கு நிலுவையில் உள்ளதால் பிரச்சினைக்குரிய நிலத்தில் யாரும் நுழையக் கூடாது.ஆடு, மாடுகளை மேய்த்துக்கொள்ளலாம்.மேலும் ஜன.3 அன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் எல்லையை சர்வே செய்து கல்நடும் பணி நடைபெறும் என்று உறுதியளித்தார்.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் எம்.சி.சீனு தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், வட்டச் செயலாளர் இ.ராn
ஜந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரியபிகாஷ், வட்டக் குழு உறுப்பினர் ப.லொகநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டச் செயலாளர் கண்டனம்.
ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் எம்.சி.சீனு மிரட்டப்பட்டதற்குக் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.