சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 2017-ம் ஆண்டு மழை அளவு 6 சதவீதம் அதிகமாகவும் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச்சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நேற்று டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பெய்த மழை அளவைப் பட்டியலிட்டார். 2017-ம் ஆண்டு முழுக்க 92 சென்டி மீட்டர் என்ற இயல்பான அளவை விட 6 சதவீதம் அதிகரித்து 97 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகம் புதுச்சேரியில் தென் மேற்குப் பருவ மழையைப் பொறுத்த வரை 29 சதவீதம் அதிகமாகவும், வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை 9 சதவீதம் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையைப் பொறுத்தவரை இயல்பான அளவான 132 சென்டிமீட்டரை விட 5 சதவீதம் கூடுதலாக 139 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். நெல்லை, கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட இடங்களில் இயல்பைவிட அதிக மழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.