சென்னை;
அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும், நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.இந்திய மருத்துவத்துறை சீரழிக்கும் விதமாக, அவற்றை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்கும் சதித் திட்டங்களை மோடி அரசு கைவிட வேண்டும்; புதிதாக கொண்டுவந்துள்ள ‘தேசிய மருத்துவ ஆணையம்’ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.1934-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை நிறுவுவதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

“அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள்; புதிய இடங்களை (சீட்) அவர்களாகவே உருவாக்கிக் கொள்ளலாம்; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 60 சதவிகித இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை அந்தந்தக் கல்லூரிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்; முதுகலை மருத்துவ படிப்புகளையும் தொடங்கிக் கொள்ளலாம்; இவற்றுக்கு அரசின் அனுமதியை பெற தேவையில்லை” என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தது மருத்துவ வல்லுநர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.இதையடுத்து, நட்டா தாக்கல் செய்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்தன. மருத்துவத்துறையை முழு அளவில் வியாபாரம் ஆக்குவதற்கான திட்டங்கள் இந்த புதிய மசோதாவில் உள்ளதாகவும், இது ஊழலையும், முறைகேட்டையும் அதிகரித்து இந்திய மருத்துவத்துறையையே சீரழித்து விடும் என்றும் காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.“புதிதாக அமையும் தேசிய மருத்துவ ஆணையம், எடுக்கும் முடிவுகளுக்காக, அரசின் மீதோ அல்லது அதிகாரிகள் மீதோ நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யக் கூடாது; நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று கூறப்பட்டிருப்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோச்சிங் செண்டர்களை வளர்த்து விடுவதற்கான ஏற்பாடுகள் புதிய சட்ட மசோதாவில் இருப்பதும், ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி விட்ட நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் அமைக்கப்படும் 4 தன்னாட்சி வாரியங்கள்தான் இனிமேல் இளங்கலை, முதுநிலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு, மருத்துவர்கள் பதிவீடு போன்றவற்றை கண்காணிக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மருத்துவப் படிப்பை முடித்த பின்பும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்படும்; அதிலும் தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் பணியாற்ற முடியும் என்று விதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான், மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: