அல்மோரா (உத்தர்காண்ட்), ஜன. 1-

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வலுவான இயக்கங்களைக் கட்டிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தர்காண்ட் மாநில மாநாடு சபதம் மேற்கொண்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 18-22 தேதிகளில் தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அதனையொட்டி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கட்சியின் மாநில, மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. உத்தர்காண்ட் மாநிலம் அல்மோரா நகரில் அமைந்துள்ள பகவதி அரண்மனையில் டிசம்பர் 16 அன்று கட்சியின் ஆறாவது மாநில மாநாடு நடைபெற்றது.

திகாரி சமஸ்தானத்தை எதிர்த்து நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டத்தில் தியாகிகளான தோழர்கள் நாகேந்திர சக்லானி மற்றும் போலு பண்டாரி ஆகியோரின் நினைவாக அவர்களின் பெயர்கள் மாநாட்டு அரங்கிற்கு சூட்டப்பட்டன.

மாநாடு துவங்குவதற்கு முன்னர் நகரின் வீதிகள் வழியே மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணி/பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமாகிய ஹன்னன்முல்லா,  சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்கள் தங்கள் உரைகளில் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறெல்லாம் நாட்டின் நலன்களை ஏகாதிபத்தியவாதிகளுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் சரண் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கினார்கள்.  லஞ்சத்தை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எண்ணற்ற லஞ்ச ஊழல்களில் சிக்கித் தவிப்பதையும் பட்டியலிட்டார்கள். மேலும் தலித்துகள், முஸ்லீம் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை வெறியாட்டங்களையும் பாதுகாப்பற்ற சூழலையும் எடுத்துரைத்து அவற்றுக்கெதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள்.

மாநில மாநாட்டின் அமர்வினை மாநில செயலாளர் விஜய் ராவத் செங்கொடியை உயர்த்தித் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தியாகிகளின் ஸ்தூபிக்கு பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தியபின் மாநாடு துவங்கியது.  ஹன்னன்முல்லா மாநாட்டில் துவக்கவுரை நிகழ்த்தினார். அப்போது அவர் மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து கட்சி முன்னேற வேண்டும் என்றார்.

ராஜேந்திர சிங் நெகி மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையை சமர்ப்பித்தார்.  32பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றனர். பின்னர் அறிக்கை ஒருமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.

பின்னர் மாநாடு 25 பேர்கள் அடங்கிய மாநிலக்குழுவைத் தேர்வு செய்தது. மாநிலக்குழு ராஜேந்திர சிங் நெகி அவர்களைச் செயலாளராகத் தேர்வு செய்தது.   சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் நிறைவுரையாற்றினார். அப்போது அவர், ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறி நடவடிக்கைகளுக்க எதிராகவும், நவீன தாராளமயக் கொள்கைகளின் நாசகரமான விளைவுகளுக்கு எதிராகவும் விரிவான அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மாநாட்டில் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களிலிருந்து 139 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  கங்காதர் நாட்டியால் நன்றி கூற மாநாடு நிறைவடைந்தது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசியிலிருந்து தமிழில்: ச.வீரமணி)

 

Leave a Reply

You must be logged in to post a comment.