மா.அண்ணாதுரை
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் டி.சீனிவாச அய்யர்-லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப்பிறந்தவர் லட்சுமண அய்யர் அவர்கள். 22.2.1917 அன்று பிறந்து 02.01.2011 ம் ஆண்டு தனது 93 ம் வயதில் மறைந்துள்ளார். லட்சுமண அய்யர் குடும்பம் மிகவும் வசதியான,சொல்லப்போனால் சுமார் 650 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரக் குடும்பம். தனியாக ஓர் வங்கியும் வைத்திருந்த குடும்பம். செல்வச்செழிப்பில் துவங்கிய வாழ்க்கை.

இவரது தந்தை டி.சீனிவாச அய்யர் கோபி,பவானி,கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.அவரும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் அரிசன மக்கள் முன்னேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர். அது தீண்டாமை எனும் பேய் உச்சத்தில் ஆடிய காலம். அப்போதே பட்டியலின மக்களைத் தனது இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சமபந்தி விருந்து வைத்து புரட்சி செய்தவர். தனது வீட்டில் இருந்த கிணற்றில் பட்டியலின மக்களை நீர் இறைக்கச் செய்து அதனை பிராமணர்கள் பார்க்கும் வகையில் ஊற்ற வைத்து, கையேந்தி தண்ணீர் குடித்து புரட்சி செய்த தந்தையைப் பெற்றவர் தான் நமது லட்சுமண அய்யர் அவர்கள்.

ஒரு முறை காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கோபிச்செட்டிப்பாளையம் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது அவரே பறையை வாங்கி வீதி வீதியாகச் சென்று அடித்துள்ளார். அவரது தந்தை சீனிவாச அய்யர் அவர்களிடம் இச்செய்தியை பிராமணர் ஒருவர் சென்று கூறியபோது தனக்கு தெரியும் என்று எவ்வித சலனமும் இல்லாமல் பதில் அளித்துள்ளார். தலித் மக்கள் தான் இன்றும் பறையடிப்பதை வழக்கமாக செய்கின்றனர். அன்றைய சூழலில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இளைஞர் பறையடித்ததும், அதனை அவரது தந்தை ஏற்றுக்கொண்டதுமான நிகழ்வு போற்றுதலுக்குரியது. பட்டியலின மக்களை வீட்டிற்கு அழைத்து சமபந்தி போஜனம் அளித்துள்ளார். இதனால் அக்ரகாரத்தில் இவர் குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

தாழ்த்தப்பட்டோர் சண்டாளர்கள் என்ற அடைமொழியோடு ஒதுக்கப்பட்ட காலம். சேரி என்பதே ஊருக்கு வடக்கே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த காலம். தாழ்த்தப்பட்டவர் நடந்து செல்லும் பொழுது சப்தம் எழுப்பிக்கொண்டே செல்ல வேண்டும். பெண்கள் உயர்சாதிக்காரர் எனப்பட்டோர் வருவதறிந்தால் தனது மேலாடையை அகற்றிக்கொள்ள வேண்டும். இது தான் ‘உயர்சாதிக்காரருக்கு’ அவர் செய்யும் மறியாதை. விருந்து வைத்தால் நெய் பயன்படுத்தக்கூடாது. உலோகப் பாத்திரம் பயன்படுத்தக் கூடாது மீறினால் அடித்து நொறுக்கப்படும்.

இவை போன்ற கொடுமைகள் அமலில் இருந்த காலம். இன்றும் கூட ஆலயத்திற்குள் நுழைய முடியாத,செருப்புப்போட்டு நடக்க முடியாத, முடிவெட்ட முடியாத, மீசை வைக்க முடியாத, நாற்காலியில் அமர்ந்து டீ குடிக்க முடியாத நிலை உள்ளது. இப்படி நூற்றுக்கணக்கான தீண்டாமைக்கொடுமைகள் இருப்பதைச் சொல்லிக்கொண்டே போகும் அவலம் உள்ள நிலையில், அன்று லட்சுமண அய்யர் குடும்பமே தலித் மக்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டுள்ளதை என்னவென்று கூறுவது.

காந்தியடிகளையும், அகில இந்திய அரிசன சேவா சங்க செயலாளர் தக்கர் பாபா அவர்களையும், டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இம்மூவரைச் சந்தித்ததை தனது வாழ்நாள் சாதனையாக கருதியுள்ளார். பின்னாளில் இவர் ஆரம்பித்த பள்ளிக்கு தக்கர் பாபா என்ற பெயரையே வைத்துள்ளார் என்றால் அவர் மீதும், தக்கர் பாபா அரிசன மக்களுக்குச் செய்த சேவை மீதும் இவருக்கு ஏற்பட்ட மதிப்பின் காரணம் என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு முறை காந்தியடிகளைச் சந்தித்து தான் நாட்டிற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.காந்தியடிகளோ “நீ என்ன சாதி எனக்கேட்டுள்ளார்.லட்சுமண அய்யர் அவர்கள் தான் பிராமணர் என்று கூற, அப்படியானால் அரிசன மக்களுக்கு கல்விச் சேவை செய்” என்று கூறியுள்ளார்.அதனை ஏற்றே நமது லட்சுமண அய்யர் ஆண்களுக்கு என னு.ளு. ராமன் விடுதியையும், பெண்களுக்கு என சரோஜினி விடுதி என்றும் ஆரம்பித்துள்ளார். கூடவே தக்கர் பாபா பெயரில் ஓர் பள்ளியையும் ஆரம்பித்துள்ளார்.இது தவிர ஓர் தொழிற்பயிற்சியையும் துவங்கியுள்ளார். இதுவரை இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பட்டியலினத்தவர் என்பதும் மற்றும் பிற்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பான்மையினர் இன்று அரசுப்பணிகளில் உள்ளனர். அரசு ஊழியர்கள்கள், ஆசிரியர்கள் மற்றும் வங்கி, எல்.ஐ.சி என்று பல உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களாகவும், பணியில் உள்ளவர்களாகவும் உள்ளனர்.

கல்விப்பணியில் பள்ளியையும், விடுதியையும் இலவசமாக ஆரம்பித்து கல்வி கற்பித்த பின் பலர் தங்களது மேல் படிப்புக்களுக்கு உதவி கேட்டு வந்தபோதும்,அவரிடம் பணம் இல்லாதபோதும் பண உதவியையும் செய்துள்ளார். ஒரு மாணவர் தனது கல்லூரி படிப்புக்கு தான் கட்ட வேண்டிய ரூ.4500 ஐ கட்ட இயலவில்லை என்று லட்சுமணனிடம் கூறியபோது அவரிடமும் பணம் இருக்கவில்லை. ஆனால் அவரது இல்லத்தரசி சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். இவ்வாறு கொடுத்த காலம் என்பது அவர் வறுமையில் வாடிய காலம். ஒரு காலத்தில் 650 ஏக்கருக்குச் சொந்தக்காரரான குடும்பத்தில் பிறந்த அவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் தானம் கொடுத்தது போக சொத்து எதுவுமில்லாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபியைச் சுற்றி பல ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலத்தை அரசுக்கட்டடங்களுக்காகவும், குடிநீர் தொட்டி கட்டவும், பல பள்ளிகளுக்கு தானமாகக் கொடுத்துள்ளார்கள்.பட்டியலின மக்கள் வீடு இல்லாத நிலையில் அவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலமும், அதில் வீடு கட்டிக்கொள்ள தங்களது வங்கியில் கடனாக மாதம் 1-00 ரூபாய் திருப்பித்தரவேண்டும் என்ற நிபந்தனையில் கொடுத்து, பின் ஒரு கட்டத்தில் அதனையும் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்று தள்ளுபடி செய்துள்ளனர். தங்கள் சொத்துக்களை எல்லாம் இழந்த நிலையில், குடியிருந்த வீடும் ஏலம் போய், ஏலம் எடுத்தவர் மனிதாபிமானத்தால் அதனைத்திருப்பிக்கொடுத்துள்ளார்.அந்த வீடு தான் தற்பொழுது அவர்களது குடும்பம் குடியிருக்கும் வீடு ஆகும்.

தியாகி என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான லட்சுமணன் தனது மாணவர் ஒருவர் தனது விடுதியில் படித்து, ஆசிரியர் வேலையில் சேர்ந்து, பணிபுரிந்து கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு வந்து அவரிடம் தான் ஓர் வீட்டு மனை வாங்க வேண்டும், ஒருவர் தனது நிலத்தை விற்கிறார் என்று கூறியவுடன் அவரை அழைத்துச் சென்று எனது மகன் வீடு கட்ட நிலம் வேண்டும், கொடுப்பாயா என்று கேட்க, லட்சுமணனே நேரில் வந்த பிறகு கொடுக்காமல் என்ன என்று கூறியுள்ளார்.சொற்ப பணத்தை வாங்கிக்கொண்டு லட்சுமணன் கேட்டதால் அந்த மாணவருக்கு மனையை விற்பனை செய்துள்ளார்.இது மட்டுமல்ல பலர் தங்களுக்கு மாறுதல் வேண்டும் என்று கேட்டு வந்தாலும் அவர்களை அழைத்துச் சென்று மாறுதல் வாங்கிக்கொடுத்துள்ளதாகவும், அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர்.

ஒரு முறை கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஒருவர் தனது ஊரில் இருவரை லட்சுமணன் வந்து பாராட்ட வேண்டும் என்று கேட்க, இவரிடம் பஸ்ஸிற்குப்பணம் இல்லாமல் அருகில் இருந்த கடைகளில் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.அங்கு சென்றவுடன் விழா ஏற்பாட்டாளரை அழைத்து நான் பாராட்ட எதுவும் பரிசு கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன், ஆகவே இரு சால்வை வாங்கிக்கொடுக்க முடியுமா என்று தயக்கத்துடன் கெஞ்சுவது போல் கேட்டுள்ளார்.இதனைக்கேட்டு கண்ணீர் மல்க இப்படியும் ஓர் தலைவர் இருந்திருக்கிறார் என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் தான் உண்டியல் மூலம் நன்கொடை பெற்று மக்கள் பிரச்சனைகளுக்காக இயக்கம் நடத்துவார்கள்.ஆனால் லட்சுமணன் தான் நடத்தி வந்த விடுதியில் உள்ள மாணவர்கள் உண்பதற்கு உணவு சமைக்க முடியாத நிலை வரும்போதெல்லாம் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று 1ரூபாய், 2 ரூபாய் என்று பணம் வாங்கி வந்து அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றிய காலமும் உண்டு என்கின்றனர். அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியவில்லையே என்று கண்ணீர் விடுவாராம்.

பல நேரங்களில் தனது கையில் உள்ள மோதிரத்தை அடகு வைத்துக்கொண்டு பணம் பெற்று வந்து அரிசி வாங்கி மாணவர்களுக்கு உணவு சமைத்துப்போட்ட காலமும் உண்டு என்கின்றனர் அங்கு படித்த மாணவர்கள். அதிகாலை நான்கு மணிக்கே விடுதிக்கு வந்து மாணவர்களை எழுப்பிவிட்டு, குளிக்க வைப்பாராம். குளித்துவிட்டானா என்பதை அரணா கயிற்றை தொட்டுப்பார்த்து உறுதியும் செய்வாராம். நன்கு படிக்க வேண்டும் வேலைக்குச்சென்று குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.

ஆலயப்பிரவேசம்: காந்தியடிகள் அறைகூவலை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆலயப்பிரவேசம் நடந்தபோது லட்சுமணன் கோபிப் பகுதியில் கோபி மாரியம்மன் கோவில், பாரியூர் அம்மன்கோவில்,சத்தி ஈஸ்வரன்கோவில்,வேணுகோபாலசாமி கோவில்,பவானி சங்கமேஸ்வரன்ககோவில் உட்பட பல கோவில்களில் பட்டியலின மக்களுடன் ஆலயப்பிரசேம் நடத்தியுள்ளார்.ஆனால் இன்று கோபி கொங்கர்பாளையம் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் ஆலயத்திற்குள் நுழைய முடிவதில்லை என்று முன்னாள் மாணவர் ஒருவர் நம்மிடம் தெரிவிக்கிறார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டம் வாவிக்கடை, எழுமாத்தூர், ராசாம்பாளையம் ஆகிய கோவில்களில் ஆலயப்பிரவேசம் செய்து வெற்றி பெற்றிருந்தபோதும் மாவட்டம் முழுதும் இன்னும் பல கோவில்களில் ஆலயப்பிரவேசம் செய்ய முடியாத நிலையும், பல்வேறு தீண்டாமைகளும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை தான்.காந்தியடிகள் தனது ‘யங் இந்தியா” என்ற பத்திரிக்கையை “அரிசன்” என்று பெயர் மாற்றியிருந்த போது 11.01.1935 ம் தேதியில் தீர்ப்பு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தர்மகர்த்தா தேர்தல் வந்தது. இத்தேர்தலில் தென்கலை வைணவர்கள் மட்டும் வாக்களிக்கலாம் என்றிருந்தது. சத்யாகிரகிகளில் ஒருவரான பி.ராமமூர்த்தி திருவல்லிக்கேணியில் ராமரையும், கிருஷ்ணரையும் வணங்கும் செருப்புத்தைக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களைதேர்தலில் பங்கெடுக்க வைக்க முடிவு செய்து, அவர்களை இணங்க வைத்து, “ஷமாஷயம”; செய்வித்தார்(போள்பட்டையில் சங்கு சக்கர சூடுபோடுவது).

பின் அவர்களை வாக்காளர்களாகப்பதிவு செய்ய சொன்னார். கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. பின் வழக்குத்தொடுத்தார்.வழக்கு விசாரணையின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வாதாடிய வெங்கட்ராம சாஸ்த்திரிக்கு உதவ ராமமூர்த்தி அவர்கள் வைஷ்ணவ ஆகமத்திலிருந்து ஒரு மேற்கோளை எடுத்து வைத்தார். அது எந்தவொரு வைஷ்ணவனும் இன்னொரு வைஷ்ணவனைப்பார்த்து நீ என்ன சாதி என்று கேட்டால்,“அவன் தன் தாயுடன் உடல்உறவு கொண்ட பாவத்தைச் செய்தவன் ஆவான்” என்பதாகும். இந்த மேற்கோள் நீதிமன்றத்தை உலுக்கியது. பின் நீதிமன்றம் தாழ்த்தப்பட்டோர் வாக்களிக்கலாம், தேர்தலில் நிற்கலாம் என்று தீர்ப்பளித்தது. பிராமணர்கள் உயர்நீதிமன்றம் சென்றனர். உயர்நீதி மன்றம் அந்தத்தீர்ப்பை உறுதி செய்தது. 200 தாழ்த்தப்பட்டோர் வாக்களித்தனர்.நாடெங்கும் இந்த தீர்ப்பும், தாழ்த்தப்பட்டோர் ஓட்டுப்போட்டதும் உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பதே அச்செய்தி. 

லட்சுமணன் ஒரு நாள் பிரமுகர் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டு சென்றுள்ளார். விருந்து பரிமாறப்பட்டபிறகும் அய்யர் உணவு உண்ணவில்லை. ஏன் என்று கேட்டபோது, தனது விடுதியில் 200 குழந்தைகள் பசியால் வாடும் போது தான் மட்டும் எப்படி இந்த விருந்துணவைச் சாப்பிடுவது என்று கூறி அந்த ஏழைக்குழந்தைகளுக்கு உணவளிக்கக் கேட்டுள்ளார். அதன் பின் ஆண்டு தோறும் அந்தப்பிரமுகர் விடுதியில் ஒரு நாள் உணவு வழங்கி வருகிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் தனது இளம் வயதில் ஈடுபட்டவர். நான்கு ஆண்டுகள் மூன்று மாதம் சிறையில் வாடியவர். காமராஜர், சந்திரசேகர், வி.பி.சிங், ராஜீவ்காந்தி போன்றவர்களுடன் தொடர்பில் இருந்த காங்கிரஸ்காரர். ஆனால் இவரது செயல்பாடுகள் அனைத்தும் கம்யூனிஸ்ட்களிடம் உள்ள எளிமையும், சேவை மனப்பான்மையும, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றுவது உள்ளிட்டவை “ தஞ்சைப்பகுதியில், தலித் மக்களை ஒன்று திரட்டி அடித்தால் திருப்பி அடி” என்று கூறிய சீனிவாசராவ் அவர்களின் பணியை நினைவு படுத்தும் வகையில் இங்கு லட்சுமண அய்யர் மேல்சாதிக்காரர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று உணவு கேட்டு மாலை வரை காத்திருப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்லி அதனைத் தடுத்துள்ளார்.

தனது சொந்த நிலத்தை பொது நலனுக்கு தானம் செய்தவர்,வைரவிழா மேல்நிலைப்பள்ளி கலையரங்கு, வைரவிழா விளையாட்டு திடல், அரிசனங்கள் விடுதி,சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மைதானம்,பொதுப்பணித்துறை நீர்வள ஆதார மைய அலுவலகங்கள், கோபி மேல்நிலை குடிநீர்த் தொட்டி,வேளாளர் விடுதி,பழனியம்மாள் விடுதி,னு.ளு.சாரதா வித்யாலயா,ஸ்ரீராமபுரம் அரிசனக்காலனி,தோட்டிகள் அரிசனக்காலனி,விவேகானந்தர் ஐ.டி.ஐ, கரட்டடிபாளையம் அரிசனக்காலனி.

1952-1955 ம் ஆண்டுகளிலும்,1986 முதல் 1991ம் ஆண்டு முடிய என இரு முறை நகராட்சித்தலைவராக இருந்துள்ளார். 1986-1991 ல் கோபியில் கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து நகரின் அனைத்துக்கழிப்பிடங்களையும் நவீனக்கழிப்பிடமாக மாற்றிய பெருமை லட்சுமணனையே சாரும் .
லட்சுமண அய்யர் அவர்களுக்கு கோபியிலோ, ஈரோட்டிலோ சிலை வைக்கவில்லை. வைரவிழா மேல்நிலைப்பள்ளிக்கு பல ஏக்கர் நிலம் தானமாகக் கொடுத்திருந்தும் சிலை வைக்க தற்போதைய நிர்வாகம் மறுத்துவிட்டதாம். எனவே முன்னால் மாணவர்கள் சேர்ந்து விடுதியில் ஓர் சிலையை நிறுவியுள்ளனர். கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள் என்றால் அது லட்சுமண அய்யர் அவர்களின் தியாகத்தால் என்றால் மிகையல்ல.

எனவே அரசே முன் வந்து நகராட்சி அலுவலகத்தின் உள்ளே ,காந்தியடிகளின் சிலை அருகே அவரது சீடரான தியாகி லட்சுமண அய்யர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பமாகும். அவ்வாறு சிலை வைப்பதன் மூலம் தமிழக அரசு அய்யரின் தியாகத்தைப்போற்றிட முடியும்.போற்றிட வேண்டும்.

தமிழகத்தில் சாதிய மோதல்கள்,ஆணவக்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்கும் பணியில் செயல்பட்டுவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிசாதி மோதல்களைத் தடுக்கவும், மக்கள் ஒற்றுமையைப்பேனவும் முயலும் ஓர் அமைப்பு என்ற முறையில் தான் லட்சுமணன் நினைவு நாளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கம் நடத்திவருகிறது. தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் துவங்கிய கல்விப்பணிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த ஆண்டு ரூ.11.25 லட்சம் நிதி ஒதுக்கி கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.
தியாகி லட்சுமண அய்யர் நினைவைப் போற்றி தீண்டாமை ஒழிப்புப்பணியைத் தொடர்வோம் என உறுதி ஏற்போம்.

கட்டுரையாளர், மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)
மாவட்டத்தலைவர்,தீ.ஒ.மு.ஈரோடு மாவட்டம்.

Leave A Reply

%d bloggers like this: