சென்னை, டிச.31-
உள்ளாட்சி தேர்தல்களுக்காக – உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்வதில் – மறுவரையறை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு டிசம்பர் 30 சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் அரசு நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகியது என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்நிலையில் கிராமப்புற ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை மாவட்ட ஆட்சியர் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வரைவு மறுவரையறை குறித்து கருத்துகள் அல்லது ஆட்சேபணைகள் இருந்தால் 2.1.2018க்குள் தெரிவிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.

வார்டுகளின் மறுவரையறை குறித்து வெளிப்படையாக அறிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் ரகசியமான முறையில் அறிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இது வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக் கூடாது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள வார்டுகளின் மறுவரையறை என்பது நிலப்பரப்பின் தொடர்ச்சி இல்லை எனவும், மறுவரையறை செய்துள்ள வார்டுகளில் உள்ள மக்கள் தொகை மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. எனவே, மேற்கண்ட இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் வரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமெனவும், அறிவித்த தேதியிலிருந்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு கருத்து கூறுவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.