அகர்தலா, டிச.31-
திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, வங்கதேச எல்லையில் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு எல்லைப் பாதுகாப்புப் படைக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் தரணிகாந்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வங்கதேச எல்லை வழியாக சட்ட விரோத கும்பல் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக, எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, இரு தினங்களுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், எல்லையோரம் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் பதிவு செய்யப்பட்டன. எல்லையில் அடுத்த வாரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். தேர்தல் பணிகளுக்குத் தேவையான பாதுகாப்புப் படைகளை அனுப்பி வைப்பதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, மத்திய துணை ராணுவப் படை விரைவில் மாநிலத்துக்கு வரும் என்று நம்புகிறேன். எல்லைக்கு அப்பால் வசிக்கும் இந்தியர்கள், எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து தேர்தலில் வாக்களிக்கலாம். இதற்கு முன்பு 3,170 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், தொலைதூரப் பகுதிகளிலும், மேடான பகுதிகளிலும் வசிப்பவர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக, அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்கு கூடுதலாக 44 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார் அவர்.

Leave a Reply

You must be logged in to post a comment.