மதுரை, டிச.31-
ஜல்லிக்கட்டு கோலாகலத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ளநிலையில், மதுரையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஆங்காங்கே பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக நீக்கக் கோரியும் ஜல்லிகட்டு நடத்த அனுமதி கோரியும் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகப் பெரும் எழுச்சி மிக்க போராட்டம்நடைபெற்றது.. தன்னெழுச்சியாக திரண்டெழுந்த மக்களின் பேராதரவு, ஜல்லிக்கட்டுக் கான சட்டத்திருத் தத்திற்கு வழிவகுத்தது. அதனால் 2017ம் ஆண்டுசற்று தாமதமாக ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்றன.

வழக்கமாக பொங்கலை ஒட்டி நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு கடந்த முறை தாமதமாக நடைபெற்றது. மதுரை மக்களுக்கு வருத்தமென்றாலும், இந்த ஆண்டு வழக்கம்போல பொங்கலை முன்னிட்டு நடைபெற விருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. தற்போது மதுரை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகேயுள்ள சோளங்குருணியில் சனிக்கிழமை அன்று அப்பகுதி இளைஞர் களுக்கு ஜல்லிக்கட்டு பயிற்சி, மாடு பிடி வீரர்களால் வழங்கப்பட்டது. சோளங்குருணி, வலையங்குளம், விராதனூர், நெடுங்குளம், காரியாபட்டியைச் சேர்ந்த மாடு பிடி வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். வலையங்குளத்தைச் சேர்ந்த வீரர் ஜெகதீஷ் கூறுகையில், ‘மாடுகளை லாவகமாகக் கையாள்வது ஒரு கலையாகும்.

திடகாத்திரமான உடல் மட்டுமன்றி, உள்ள உறுதியும் மிக அவசியம். தற்போது நாங்கள் வழங்குகின்ற பயிற்சியின் வாயிலாக இந்தப் பகுதி இளைஞர்கள் சிறந்த மாடுபிடி வீரர்களாக மட்டுமன்றி, வெற்றி வாகைசூடக் கூடியவர்களாகவும் திகழ்வார் கள். இந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 15 மாடுபிடி வீரர்கள் தற்போது தயாராக உள்ளனர். தவிர, சிறுவர்களுக்கும் இப்போதிருந்தே தேவையான பயிற்சிகளை காளைக் கன்றுகள் மூலமாக வழங்கி வருகிறோம்’ என்றார். மதுரை கரிசல்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் தீபக் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு இன்று, நேற்று தொடங்கியதல்ல. மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு மாடுகளுக்கும், மனிதர்களுக்குமான உறவு இது. சிலரின் தவறான புரிதலால் இந்த வீர விளையாட்டுக்கு தடை கோரும் நிலையேற்பட்டுவிட்டது. அதனைப் போராடிப் பெற்ற இளைஞர்களுக்கு மதுரை மாவட்டம் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளது’ என்றார்.

பயிற்சி வழங்கும்போதே காளையின் வால், கொம்புகளைப் பிடிக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலை வீரர்கள்,தொடர்ந்து இளைஞர்களுக்கு அறிவுறுத்தினர். அதேபோன்று எக்காரணத்தைக் கொண்டும் ‘கிட்டி’ போடக்கூடாது (மாடுகளின் கால்களை தங்களது கால்களால் பின்னுதல்) என்பதும் அவர்களின் ஆலோசனையாக இருந்தது. அதேபோன்று காளைகளை வேறு எந்த வடிவத்திலும் துன்புறுத்தக்கூடாது. வீரர்களின் கவனம்முழுவதும் காளைகளின் திமிலில்தான் இருக்க வேண்டும் என்றும் அதனைஇறுகப் பற்றிக்கொண்டு தழுவுவதுதான் ஒரு வீரனுக்கு அழகு என்றும் அறிவுறுத்தினர். இந்தப் பயிற்சியில் 20-க்கும் மேற்பட்ட காளைகளும், 50-க்கும்மேற்பட்ட இளைஞர்களும் பங்கேற்றனர்.

பருத்தி, கானப்பயிறு, சோளம்,தட்டை, புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்து மாடுகளையும் தயார்ப்படுத்தி வருகிறார்கள். மாடுகளுக்கு நீச்சல் மற்றும் நடைப்பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் தற்போது தைப் பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு தயாராகி வருகின்றது.

Leave A Reply

%d bloggers like this: