நாகர்கோவில், டிச.31-
யாரும் எதிர்பாராத நேரத்தில் அசுர ஆட்டத் தால் குமரியை சின்னாபின்னமாக்கி சென்று விட்டது ஒக்கி புயல். ஆனால் அது ஏற்படுத்திவிட்டு சென்ற வடு மட்டும் இன்னும் மாறாமல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது குமரி மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி முதல் இருளடைந்தது குமரி மாவட்டம் மட்டுமல்ல, கடற்கரை கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள், மலைவாழ் காணி மக்களின் எதிர்காலமும்தான். தங்கள் தந்தையை, கணவனை, சகோதரனை இழந்த பல குடும்பங்களின் அழுகுரல் இன்னும் அந்த கடலின் அலையோடு போட்டியிட்டு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நீந்த முடியாமல் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை கைவிட்டு திரும்பிய மீனவர்களின் கொடிய அனுபவம் என்றென்றும் மறக்க முடியாத கொடிய அனுபவம்.

அரசு நிர்வாகம் என்ன செய்தது?
குமரி மாவட்டத்தின் நீரோடி, இரையுமன்துறை, தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, தேங்காப்பட்டணம் என பல மீனவ கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகள், தங்கல் வள்ளங்களில் மீன் பிடிக்க சென்றோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். ஒக்கி புயல் வருவதற்கு முன்பு 3 தினங்களுக்கும் மேலாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனை கண்டு மீண்டும் சுனாமி வரும் என கடற்கரையோர மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இதையொட்டி சுனாமி வரப்போவதாக மக்களை பயமுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனால் கலக்கமடைந்த குளச்சல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவமக்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்து பெட்டி படுக்கையை எடுத்து கொண்டு உறவினர் வீடுகளுக்கு செல்லத் தொடங்கினர்.

இதனால் மாவட்ட நிர்வாகம், சுனாமி குறித்த வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படுவர் என எச்சரித்தது. இதனையடுத்து சில தினங்களுக்குள் கடற்கரை பகுதிகளில் சுனாமி ஒத்திகை தமிழக அரசால் சம்பிரதாயத்திற்காக நடத்தப்பட்டது. 29 ஆம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மீட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனாலும் புயல் குறித்த எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. புயல் குறித்த அறிவிப்பு தொலை தொடர்பு பிரச்சனையால் விசைப்படகு மீனவர்களுக்கு எட்டாமல் இருந்தால் கூட, கரையில் இருந்த மீனவர்களுக்கு கூட எச்சரிக்கை செய்தி சென்றடையாதது ஏன் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 29 ஆம்தேதி இரவு மீனவ கிராமங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியிருப்பதாகவே ஆலயங்கள் வழியாக அறிவிக்கப்பட்டது. மீனவ கிராமங்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கை முறையாக வழங்கப்படாததாலேயே மீனவர்கள் கடலுக்கு சென்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

புயலுக்கு பின்..
டிசம்பர் 29 இரவு முழுவதும் காற்றும், கனமழையும் அச்சுறுத்தியது. தொடர்ந்து காலையில் துவங்கிய சூறாவளிக்காற்று மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. புயலுக்கு பின்னர் அதிலிருந்து தப்பிய சில மீனவர்கள் மூலமே கடலில் புயலால் அடித்து செல்லப்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவர்கள் குறித்த தகவல் கடற்கரை மக்களுக்கு தெரிய வந்தது. உடனே கரையிலிருந்த மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மீன்வளத்துறையையும் தொடர்பு கொண்டு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள், புயல் ஓய்ந்த பிறகு தேடலாம் என மெத்தனமாக பதிலளித்தனர். இதனையடுத்து 30 ஆம் தேதி இரவு முதல் கடலில் மாயமான மீனவர்களை கடலோரகாவல்படை மூலம் தேடும் பணியை துவங்கிய தாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் 1 ஆம்தேதிதான் மீனவர்களை தேடும் பணியை அரசு செய்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.

தாமதமாக கடலில் தேடும் பணியை துவங்கிய தமிழக அரசின் கடலோர காவல்படை சுமார் 10 அல்லது 15 நாட்டிக்கல் மைல் தொலைவிலேயே தங்கள் தேடும் பணியை முடித்து விட்டு எந்த மீனவரையும் மீட்காமலேயே திரும்பி வந்தது. ஆனால் புயலுக்கு தப்பிய பல மீனவர்கள் கடலில் விசைப்படகுகளிலும், வள்ளங்களிலும் தத்தளித்த தங்கள் உறவுகளையும், இறந்து கடலில் மிதந்த உடல்களையும் மீட்டு கரை சேர்த்தனர். பல மீனவர்கள் தங்கள் சுய முயற்சியாலும் கரை சேர்ந்தனர். ஆனால் தமிழக அரசு கடைசி வரை மீனவர்களை மீட்போம் என்று வாய்ப்பந்தல் போடுவதிலேயே காலங்கழித்தது. தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக கப்பல் படையையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்பி தேடும் பணியை நடத்தி யிருந்தால் பல மீனவர்களை உயிருடன் மீட்டிருக்கலாம் என்பதே மீனவ மக்களிடம் நீடிக்கும் பதற்றத்துக்கு காரணம்.

புயல் ஓய்ந்து அடுத்த நாள் மீட்பு பணியை தொடங்கிய தமிழக அரசு நிர்வாகம் ஒரு சில இடங்களை மட்டுமே புயல் நிவாரணம் என்ற பெயரில் சுற்றி சுற்றி வந்ததோடு, புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட மேற்கு மாவட்ட பகுதி களையோ, கடற்கரை பகுதிகளையோ சென்று பார்க்காததோடு, நிவாரண பணிகளை கூடசெய்யவில்லை. உறக்கத்திலிருந்து திடீரென விழித்தது போல் தாமதமாக தனது மீட்புப் பணிகளை துவங்கிய தமிழக அரசு மிகவும் தாமதமாகவே கடலோர காவல் படையை காணாமல் போன மீனவர்களை தேடும் பணிக்கு அனுப்பியது. அவர்கள் கடலில் 10 அல்லது 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் தனது தேடுதல் பணியை மேற்கொண்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஒக்கி புயல் வந்து ஒரு பல நாட்களாகியும், தமிழக அரசு சார்பிலோ, மத்திய அரசு சார்பிலோ போதுமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் பொறுமையிழந்த மீனவர்கள், தங்கள் உறவுகளை தேடி கடலில் தேடும் பணியை தொடங்கினர். அதில் 30 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டு கரை சேர்த்தனர்.

இன்னும் குமரிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 183 மீனவர்கள் மற்றும் 9 வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கரை திரும்பவில்லை என மீனவ அமைப்பினர் கூறுகின்றனர். வள்ளவிளையைச் சேர்ந்த டெரிசா என்கிற பெண்மணி (30)கூறுகையில், காணாமல் போனவர்களை அரசால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் தேடிப்போகிறோம் அனுமதி தரட்டும் என்றார்.

கடல்லயே செத்திருப்போம்:
புயல் தாக்கியவுடன் கேரள கடலோர காவல் படையையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்பி கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டது கேரள அரசு. இந்த முயற்சியால் பல படகுகளும் மீனவர்களும் காப்பாற்றப்பட்டு கரை திரும்பியதோடு, அவர்களுக்கு கேரள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இது குறித்து குமரி மாவட்டம் முள்ளுர்துறை மீனவர் வர்கீஸ் கூறுகையில், நாங்க 2 பேரு தேங்காப்பட்டணம் துறையிலருந்து 29 ஆம் தேதி பகல்ல கடலுக்கு வள்ளத்தில மீன்பிடிக்க போனோம். எங்களுக்கு புயல் வாறது பற்றி எதுவும் தெரியாது. அரசாங்கம் எங்களுக்கு அறிவிக்கவும் இல்ல. 30 ஆம் தேதி விடியற் காலைல கன்னியாகுமரிக்கு கீழ கரையிலண்டு 23 கிலோ மீட்டர் தூரத்தில வச்சி புயல் எங்களை தாக்கிச்சி. அதுல நாங்க போன வள்ளம் கவுந்து போச்சு. நாங்க கடல்ல தத்தளிச்சுட்டு இருந்தம்.

அப்ப அந்த பக்கமா போன கடலோர காவல்படைகப்பல், எங்கள காப்பாத்துங்கன்னு நாங்க கதறியும் எங்கள காப்பாத்தாம போனாங்க. பெறவு நிறய நேரங்கழிச்சு கேரள கவர்மெண்ட் அனுப்புன ஹெலிகாப்டருல வந்தவுங்க எங்கள காப்பாத்தி கரைக்கு கொண்டு வந்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில சேத்தாங்க. அங்க எங்களுக்கு நல்லா சிகிச்ச தந்தாங்க. எங்கள காப்பாத்தி கொண்டு வந்த பெறவு தமிழ்நாடு அரசாங்கத்திலருந்து ஒரு அதிகாரி கூட எங்கள வந்து பாக்கல. கேரள அரசு உதவியில நாங்க உயிரோட இருக்கோம். கேரளத்து அரசாங்கம் மக்களுக்கு வேண்டி இருக்குது. இங்க அரசாங்கம் மக்கள கொன்னாவது அதிகாரத்தில இருக்கணும்னு நினைக்குது. கடல்ல காணாத போன மீனவன காப்பத்த கப்பல் அனுப்ப முடியலன்னா தமிழ்நாட்டுல கவர்மெண்ட் எதுக்கு? என கேட்டார்.

நாங்கள் 8 பேர் 13 நாட்களுக்கு முன் கடலில் தொழிலுக்கு சென்ற போது, கடந்த நவம்பர் 30 ஆம் தேதி கொல்லத்திற்கும் ஆலப்புழாவுக்கும் இடையில் உள்ள ஓரிடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் புயல் எங்களை மிகக்கொடூரமாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் நாங்கள் இருந்த படகு முழுவதும் கடல் தண்ணீர் நிறைந்தது. எங்கள் படகு அங்குமிங்கும் அலைமோதியது. எங்கள் படகில் இருந்த பொருட்கள் அனைத்தும் புயல்காற்றில் தூக்கி வீசப்பட்டது. எங்கள் படகில் இருந்த வலை, படகின் இஞ்சினில் சிக்கியதால் இஞ்சின் தானாக ஆப் ஆகியது. இதனால் எங்கள் படகை நகர்த்த முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தோம். எங்கள் படகில் இருந்த ஜிபிஎஸ், வயர்லெஸ் அனைத்தும் தண்ணீரினால் சேத மடைந்ததால் கரையில் இருந்தவர்களுடன் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியவில்லை. கடலில் இருந்த விசைப்படகுகள் அருகில் வந்த போது கூட அவர்களால் எங்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்களும் ஆபத்தில் இருக்கும் போது முதலில் தற்காப்பதே பெரும்விஷயமாக இருந்தது. வேறு எதுவும் சாப்பிட முடியாததால் உப்புத்தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்தோம்.

வியாழக்கிழமை இந்திய கடற்படை எங்கள் அருகே சென்ற போதும், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற எங்கள் மரண ஓலத்தை கேட்காமல் அவர்கள் எங்களை கடந்து சென்றனர். பின்னர் எங்களை காப்பாற்றிக் கொள்ள படகில் இருந்த நீரை கோரி கடலில் விட்டோம். அதன்பிறகு அந்த வழியாக ராணுவ ஹெலிகாப்டர் வந்த போது, அதிலிருந்தவர்கள் எங்கள் படகில் இறங்கி எங்கள் படகின் இஞ்சினை சரி செய்து எங்களை காப்பாற்றினர். அதன்பிறகு நாங்கள் எங்கள் படகை மெதுவாக தேங்காப்பட்ட ணம் துறைமுகத்தை நோக்கி ஓட்டி வந்தோம் என கடலில் இருந்து மீண்டு வந்த மீனவர் மரியதாஸ் (43) கூறினார். நாங்கள் புயல் வருவதற்கு முன்பே கடலில் தொழிலுக்கு போனோம். புயல் குறித்த எந்த அறிவிப்பும் எங்களுக்கு கிடைக்க வில்லை. வழக்கமாக புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் வரும் போது எங்களை தாண்டிச்செல்லும் கப்பலில் உள்ளவர்கள் எங்களை எச்சரித்து செல்வார்கள்.

ஆனால் இந்த முறை பல கப்பல்கள் எங்களை தாண்டி சென்ற போதும் யாரும் எங்களை எச்சரிக்கை செய்யவில்லை. நாங்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென தாக்கிய புயலால் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. எங்கள் படகில் இருந்த வயர்லெஸ் எரிந்தது. கம்பங்கள் ஒடிந்து தெறித்தன. ஆங்கர் கட் செய்யப்போகும் போது தூக்கி வீசியதில் எங்களை சேர்ந்த செபாஸ்டினுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. படகு அங்கும் இங்கும் அலைக்கழிந் தது. படகில் நிரம்பிய தண்ணீரை கோரி கடலில் விட்டோம். புயல் ஓய்ந்த பிறகு மெதுவாக கரையை கண்டுபிடித்து வந்து சேர்ந்தோம். எனது படகின் விலை 80 லட்ச ரூபாய். நான் வீட்டை விற்று, சொத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன்வாங்கி இந்த போட்டை வாங்கினேன். வங்கியில் எனக்கு 13 லட்சம் ரூபாய் இன்னும் கடன் இருக்கு. இந்த புயலால் நிர்க்கதியாகி நிற்கிறேன் என்றார் ஜோஸ் ஷிபு (47).

கடலில் விடப்பட்ட பிணங்கள்:
நாங்க தேங்காப்பட்டணம் துறையிலண்டு நவம்பர் 28 ஆம் தேதி 6 பேரு தங்கல் வள்ளத்தில் சுமார் 34 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடிக்க சென்றோம். திடீரென தாக்கிய புயலில் எங்க வள்ளம் கடலில் கமந்துச்சி. நாங்க எங்க உயிரை காப்பாத்த வள்ளத்த இறுக்கி பிடிச்சுண்டு இருந்தம். எங்க ஓணரு கடலில் குளிர் ஏறி செத்துகடலில தாந்தாரு. அவர நாங்க நீந்தி தூக்கி கொண்டு வந்து வள்ளத்தில சேத்து வச்சு கட்டனோம். இன்னொருத்தரும் கடல் குளிர்ல செத்து கடலில தாந்தாரு. அவரையும் நாங்க வள்ளத்துல கட்டி வச்சோம். நேரம் போவ போவ அவியளுக்க பொணத்த பாத்து எங்க 4 பேருக்கும்பயமா இருந்துச்சி. அதனால நாங்க அவங்க பாடிய கட்டியிருந்த கயித்த அறுத்து அவங்கள கடலில விட்டோம். பெறவு அந்த பக்கமா ஒரு கப்பல் வந்துச்சு. நாங்க எங்கள காப்பாத்த கேட்டு அவங்களுக்கு சிக்னல் காட்டுனோம். அவங்களும் எங்களுக்கு சிக்னல் காட்டிட்டு அவங்க கப்பல்ல இருந்த லைட் எல்லாத்தையும் அணைச்சிட்டு கிளம்பிட்டாங்க. ரொம்ப நேரம் கழிச்சு இன்னொருகப்பல் வந்துச்சி. நாங்க, அவங்க கப்பல நிறுத்திஎங்கள காப்பாத்துனா காப்பத்தட்டும், இல்லனா கப்பல்ல மோதி செத்துருவோம்னு சொல்லி கப்பல பாத்து நீந்தினோம். ஆனா அந்த கப்பல்வேகத்த குறைச்சி எங்க பக்கம் வந்து நின்னுச்சி. அதுல வந்தவங்க எங்கள கரை சேர்த்தாங்க எனதனது கண்ணீர் கதையை கூறினார் நீரோடியை சேர்ந்த அந்தோணி அடிமை.

ஜீன்பால்

Leave a Reply

You must be logged in to post a comment.