அகர்தலா, டிச.31-
இந்திய நாட்டிற்கு தேவை ஒருதனிப்பட்ட தலைவர் அல்ல; கோடானுகோடி ஏழை மக்களின் நலன்களை பாதுகாக்கும் கொள்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முழங்கினார்.

இதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக திரிபுராவில் எட்டாவது முறையாக மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் சூளுரைத்தார். திரிபுராவில் 2018 துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை திரிபுராஇடது முன்னணி டிசம்பர் 31 ஞாயிறன்று அகர்தலாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடிய பிரம்மாண்டமான பேரணியில் துவக்கியது.

விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி – பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீத்தாராம் யெச்சூரி, “இராமாயணத்தை கவனமாக படியுங்கள். ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றும் கனவுகளோடுராமர் என்ற அந்த மன்னன் புறப்பட்டான். ஆனால் தனது கனவை நிறைவேற்ற முடியாத வகையில், லவா, குசா என்ற இரண்டு சின்னஞ்சிறிய சகோதரர் களால் தடுத்து நிறுத்தப்பட்டான். நரேந்திரமோடியின் கனவுகளை, சுத்தியலும், அரிவாளும் தடுத்து நிறுத்தும்” என்று கூறினார். “மோடியின் ஆட்சியில் இந்த நாட்டிற்கு இரண்டு முகங்கள் உருவாகியிருக்கிறது. ஒருமுகம் ஒளிர்கிறது; மற்றொரு முகம் இருண்டு கிடக்கிறது. ஒளிர்கிற முகத்தை கொண்டவர்கள் வெறும் ஒரு சதவீத மக்களே. அவர்கள்கைகளில் இந்த நாட்டின் மொத்த செல்வத்தில் 60 சதவீதம் குவிந்து கிடக்கிறது.

99 சதவீத மக்களின் முகங்கள் வறுமையாலும் துயரத்தாலும் இருண்டு கிடக் கின்றன. இந்த நாட்டின் செல்வத்தில் வெறும் 40 சதவீதத்தை மட்டும் தான் மேற்கண்ட 99 சதவீத மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது” என்று குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, “இந்த நாட்டிற்கு தேவையான முகங்கள் இருண்டு கிடக்கிற ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவான கொள்கைகள்தானே தவிர, பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி என்ற நபரின் தனிமனித சாம்ராஜ்யம் அல்ல” என்று கூறினார். பெருவாரியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது ஏதோ வெறுமனே வேலையின்மை பிரச்சனை என்பதல்ல; நாடு மிகப் பெரும் நெருக்கடிக்குள் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதன் பொருளாகும் என எச்சரித்த சீத்தாராம் யெச்சூரி, மோடியின் குஜராத் மாடல் என்பது நாட்டு மக்களுக்கு எந்த பலனையும் தராத – திவாலாகி போன ஒரு தோல்வி மாடல் என்றும் சாடினார்.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத்தில் போதிய எண்ணிக்கையில் இடங்கள் பெறவில்லை என்றாலும், எப்படியாவது ஆட்சி அமைப்பது என்ற ஜனநாயகப் படுகொலையை மோடியும், அமித்ஷாவும் அரங் கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அருணாச்சலப்பிரதேசத்திலும், மணிப்பூரிலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால் திரிபுராவில் மோடி – அமித்ஷாவின் மாயாஜாலம் எடுபடாது. பாஜகவின் கனவுகளுக்கு திரிபுரா பலத்த அடிகொடுக்கும் என்றும் சீத்தாராம் யெச்சூரிகூறினார்.பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் பிஜன்தர், இடதுமுன்னணி தலைவர் காகேன்தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.