ஒரு கலைஞனின் – குறிப்பாக ஒரு திரைப்படக் கலைஞனின் கடமை என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நான் கலைஞனல்ல, திரைப்படக் கலைஞனுமல்ல! என்னைப் பொருத்தவரையில் திரைப்படம் ஒரு கலையுருவமே அல்ல. நான் என் மக்களுக்குச் சேவை செய்ய அது ஒரு சாதனந்தான். நான் சமூகவியல் நிபுணனல்ல; ஆகையால் என் திரைப்படங்கள் மக்களை மாற்றிவிடும் என்று மனப்பால் குடிப்பதில்லை. ஒரேயொரு திரைப்படப் படைப்பாளியால் மக்களை மாற்றிவிட இயலாது. மக்கள் மிகப் பெரியவர்கள். அவர்கள் தாங்களாகவே மாறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றையும் மாற்றவில்லை. நிகழ்ந்துவரும் பெரும் மாறுதல்களைப் பதிவு செய்வது தான் என் வேலை. என் நோக்கில் திரைப்படம் ஒரு வெளியீட்டு சாதனம் மட்டுமே. என் மக்களின் துன்பங்களையும் வேதனைகளையும் கண்டு எனக்கு ஏற்படும் கோபத்தை வெளியிடும் சாதனந்தான் திரைப்படம். மக்களின் மகிழ்ச்சிகள், துன்பங்கள், ஆசைகள், கனவுகள்,இலட்சியங்கள் இவற்றைத் திரைப்படத்தை விட இன்னும் வலுவாகவும் இன்னும் நேரிடையான முறையிலும் வெளிப்படுத்தக்கூடிய வேறொன்றைமனிதனின் மூளை நாளை கண்டுபிடிக்கலாம். அந்தப் புதிய கண்டுபிடிப்பு ஓர் இலட்சிய வெளியீட்டுச் சாதனமாக அமையும்.

உங்கள் திரைப்படங்கள் ஒரு தீவிர அரசியல் உணர்வைப் பிரதிபலிப்பதால், உங்களை இந்தியாவின் முதல் அரசியல் திரைப்படப் படைப்பாளி என்று கருதலாமா?
எனக்குத் தெரியாது. என்னை ஏன் இந்த மாதிரிக் கேள்வி கேட்கிறீர்கள்? நான் எப்படி இந்த நிலையில் என்னை ஆராய்ந்து கொள்ள முடியும்? நான் அரசியல் திரைப்படப் படைப்பாளிதான். அப்படியானால் முதல் அரசியல் திரைப்படப் படைப்பாளியா, அல்லது ஒரே திரைப்படப் படைப்பாளியா – இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியவர்கள் பார்வையாளர்களே. விரிவானஅர்த்தத்தில் எல்லாத் திரைப்படங்களுமே அரசியல் படங்கள் தான்; எல்லாக் கலைகளிலும் அரசியல் உண்டு. எல்லாக் கலைஞர்களுமே அரசியல்வாதிகள் தாம். இவற்றில் வகை வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு திரைப்படப் படைப்பாளி அதற்கு அரசியல் என்று பெயர் சூட்டலாம். இன்னொருவர் சூட்டாமலிருக்கலாம், ஆனால் எல்லாமே இறுதியில் ஒரே நோக்கத்தைத்தான் நிறைவேற்றுகின்றன. திரைப்படம், அதன் இயற்கைத் தன்மையாலேயே, தன் பல்வேறு உருவங்கள் மூலமும் வகைகள் மூலமும் அரசியலுக்கும் உதவுகிறது.

நமது புராண மரபுகளும் நாடக மரபுகளும் குறிப்பாக உங்களையும், பொதுவாக இந்தியத் திரைப்படத்தையும் பாதித்துள்ளனவா?
இந்திய மனப்போக்கின் மேல் ஆதிக்கம் செலுத்தும் இதிகாச மரபு ஒன்று உண்டு. இந்த மரபு இந்தியரின் புதைமனத்தில் ஊறிப் போயிருக்கிறது. ஆகவே இந்தியர்கள் புராணப் படங்களால் ஈர்க்கப்படுவதில் வியப்பில்லை. நானும் இந்த மரபில்ஒரு பகுதிதான். நான் இதிகாச மரபிலிருந்து வேறுபட்டுச் சிந்திக்க முடியாது. நான் இதை வரவேற்கிறேன். இது நெடுங்காலமாக நமது பண்பாட்டில் கலந்திருக்கிறது, நான் என் படங்களில் முக்கியமாக மக்கள் கலையுருவத்தை நம்புகிறேன். நமது இருப்பின் (being) ஒவ்வொரு அம்சத்திலும் ‘பேரன்னை’யின் படிவம் அதன் இரட்டைத் தன்மையில் இடம் பெற்றுள்ளது. நான் இந்தப் படிவத்தை ‘மேகே டாக்கா தாரா’விலும் ‘ஜூக்திதக்கோ ஆர் கப்போ’விலும் புகுத்தியிருக்கிறேன்.

நீங்கள் புனே திரைப்பட – டி.வி.இன்ஸ்டிட்யூட்டின் துணைத் தலைவராயிருந்த போது பல இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு உற்சாகமூட்டி ஓர் அற்புதச் சாதனையை நிகழ்த்தி வீட்டீர்கள்.  இத்தகைய சிறந்த பலனைப் பெற நீங்கள் கையாண்ட முறைகள் யாவை?

ஆர்வமும் துடிதுடிப்பும் வாழ்க்கையில் உற்சாகமும் நிறைந்த சில வாலிப ஆண்களும் பெண்களும் எனக்குக் கிடைத்தனர். அவர்களை என்னிஷ்டப்படி உருவாக்க எனக்கு முழுச் சுதந்திரம் கிடைத்தது. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன்; யாரும் என்னைத் தடுக்கவில்லை. நான் அவர்களிடம் திரைப்படப்படைப்பின் உற்சாகத் தீயை மூட்ட முயன்றேன். அவர்கள் ஏன் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்களைச் சிந்திக்கச் சொன்னேன்; வந்தது. “உங்களுக்காக அல்ல, மற்றவர்களுக்குச் சேவை செய்யத்தான்” என்று கூறினேன். நான் முன்பே கூறியது போல், திரைப்படம் என்பது ஒரு வெளியீட்டு சாதனந்தான். ஆகையால் அவர்கள் தங்கள் படங்கள் மூலம் மக்களின் ஆவேசத்தை எழுப்ப வேண்டும். தங்களைத் துன்புறுத்துபவை என்ன என்று அவர்களே புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். சில மாணவர்கள் என் புத்திமதியை ஏற்றுக் கொண்டனர். சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் எல்லா மாணவர்களுமே முதல்வகுப்பு மதிப்பெண்கள் வாங்கி விடுவார்களென்று எதிர்பார்க்க முடியுமா? ஒரு சிலர் நிறைய மதிப்பெண்கள் வாங்கினாலே ஆசிரியரின் முயற்சி பயன்பெற்றதாகக் கருத வேண்டும்.

இப்போதைய அமைப்பில் திரைப்பட இன்ஸ்டிட்யூட் உண்மையான திரைப்படப் படைப்பாளிகளை உருவாக்க வல்ல வளமான நிலம் என்று கருதுகிறீர்களா?
எனக்குத் தெரியாது. நான் சற்றுக் கடுமையாயிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அங்கு ஓரிருவரே ஏதோ சாதிக்க முயல்கிறார்கள் என்று தோன்றுகிறது. கடவுள்தான் அவர்களுக்கு உதவ வேண்டும். குளறுபடி சரி செய்யப்படாவிட்டால் அதுஒரு மூன்றாந்தர அரசாங்க இலாகாவாக ஆகிவிடும். அவ்வாறு நேர்ந்தால் அது முற்றிலும் தேக்கநிலை எய்திவிடும்; மிகவும் சராசரித்தரமான படங்களே வெளி வரும். ஒன்றுக்கொன்று முரண்பட்ட சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து கடைசியில் என்ன கிளம்பி வரும் என்று என்னால் சொல்ல இயலாது; ஆனால் ஏதாவது நல்லதுவரும் என்பது தான் என் ஒரே நம்பிக்கை.

– ரவி ஓஜா, ஜூதாஜித் சர்க்கார்.

Leave A Reply

%d bloggers like this: