“நிகழ்வை அப்படியே சொல்வது கதையாகாது. கற்பனை கலந்து, கற்பனை என்று தோன்றாதவாறு படைப்பதே கதை. கருப்பொருள் மையம் கொண்டே அளவுபெறும், எந்த இடத்தில் கரு சார்ந்து முடிகிறதோ அங்கு கதை முடிகிறது. சென்னையில் நடைபெற்ற சிறுகதை எழுதும் இளம் படைப்பாளிகளுக்கான பயிற்சிபட்டறையில், “படைப்பும் பார்வையும்” என்ற பொருளில் செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தின் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் படிப்பாளிகள் படைப்பாளிகளாக மாற முடியும். பயிற்சியின்றி பட்டறிவு அனுபவத்தின் மூலம் படைப்பாளி இயங்குகிறான் என்று சொல்லி உருவம், தொடக்கம், உள்ளடக்கம், நீட்சி, முடிவு, தலைப்பு, கதைப்பொருள்,நடையின் கூறுகளை எடுத்துக் காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.

“மொழியும் கதையும்” என்ற பொருளில் எழுத்தாளர் சா. கந்தசாமி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரிந்தாலே போதும். மொழியறிவு தேவையில்லை. எல்லோருக்குமான பொதுமொழியில் எழுத 500 சொற்கள் போதுமானவை. இங்கு படைப்பு மனமே வேண்டப்படுவது. கருப்பு நிறம் அசுத்தம், ஆபாசம், புத்தியின்மை என்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது தவறு. எழுத்தின் மீது நம்பிக்கை வேண்டும் என்று கூறி தமது படைப்பனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.

“அறிவியல் படித்தால் புதிய தொழில்நுட்பம் காரணமாக பயனுண்டு. தமிழிலக்கியம் படித்தால் கடந்த காலத்தை நோக்கி பின்னால், போவதாகத் தோன்றுகிறது. எதிர் காலத்தில் நம்பிக்கை இல்லையா?” என்று தமிழிலக்கியத்துறை மாணவன் தன்னிடம் கேட்ட கேள்வியிலிருந்து தொடங்கினார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள மாணவர்கள் தன்னை வரவேற்று, பல்கலை வரலாற்றுப் பெருமை சொல்லி, பெருமைக்குரிய எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் படங்கள் முன்பு நின்று விளக்கிவிட்டு துறைவாரியாக அழைத்துச் சென்றனர். இறுதியாக வழிகாட்ட முடியாத இடம் இது… நூலகம்… என்று கூறி விட்டு ஐந்து ஜனாதிபதிகள் பயின்ற இடம்! என்று சொல்லி உள்ளே அனுப்பிவைத்தனர்” என்று வெளிநாட்டுப் பயண அனுபவத்தைக் கூறினார். மனிதனின் அகம் புறம் ஆராய்ந்து எதெல்லாம் புறக்கணிக்கப் பட்டதோ அதை இலக்கியம் காப்பாற்றும் என்று “கற்றுத்தரும் கதைகள்” என்ற பொருளில் சிறுகதை தொடக்கம், உள்ளடக்கம், அழகியல் நுட்பங்கள், கதை முடிவு குறித்து அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

“சிறுகதையைச் செப்பனிடல்” என்ற ஆர்.வெங்கடேஷின், கருத்துரை பிரசுரிக்கப்பட்ட சிறுகதையொன்று எப்படி வாசகனை சங்கடப்படுத்துகிறது என்பது சோதனைச் சாலை அனுபவத்தை ஒத்திருந்தது. நைந்துபோன சொற்கள் படுத்தும் பாடு, கதைசொல்லி யார் என்பதில் நடையின் குழப்பத்தால் ஏற்பட்ட பிசிறு, கதையின் போக்கை தாமதப்படுத்தும் அம்சம், செப்பனிடப்பட்ட பின்னர் கச்சிதமான சிறுகதை ஏற்படுத்தும் பரவசத் தாக்கம் ஆகிய கூறுகளை உணரச் செய்தார். இந்த அணுகுமுறை பங்கேற்பாளர்களை புதுமையான கோணத்தில் மாற்றி யோசிக்க வைத்தது!

“சிறுகதை: கருவும் உருவும்” என்ற பொருளில் கருத்துரை வழங்கினார் எழுத்தாளர் மாலன். கதையின் மையவிஷயம் தமிழ்ச் சிறுகதைகளில் ஐம்பது, அறுபதுகளில் ஏற்பட்ட திருப்பம்( ‘ட்விஸ்ட்’), கரு எங்கிருந்து பெறுவது, சிறுகதையில் ஒவ்வொரு வார்த்தையின் முக்கியத்துவம், சொற்சிக்கன ஆற்றல், கதையின் முதல் வரி -வாசகனை இழுக்கும் வாசற்கதவு- கதையில் நவீன மாற்றங்கள், வேறொரு கோணத்தில் இருந்து யோசிப்பது என அடுக்கிக்கொண்டே சென்று பங்கேற்பாளர்களை அவர் தன்வயப்படுத்தினார்.

சாகித்திய அகாதமி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து பயிலரங்க நிறைவுரையில் எழுத்தாளர் கி.ரா.வின் சிறுகதையை “தாமரை” மாத இதழில் பதிப்பித்த எழுத்தாளர் திகசி-யை நினைவுகூர்ந்து ‘ஷிப்ட்’ என்பது உள்ளிட்ட மொழியாக்க சிக்கல்களை சுட்டிக்காட்டினார். இலக்கியச் செயல்பாடு, இலக்கிய உணர்வு நிலை, தமிழிலும் கேரளத்திலும் உள்ள போக்குகளை அருந்ததி ராய், ஓ.வி.விஜயன் படைப்புகளுடன் ஒப்பிட்டு உரையாற்றி வாழ்த்தினார்.

பங்கேற்பாளர்கள் 25 பேரின் சிறுகதைகளையும் சாகித்திய அகாதமி வெளியிடவிருப்பதாக அ.சு. இளங்கோவன் பெருத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். படிப்பாளிகளே படைப்பாளிகளாக பயிற்சிப் பட்டறையை இரு அமைப்புகளின் சார்பாக முன்நின்று நடத்தியது இதன் வெற்றியைக் கட்டியம் கூறியது.

Leave A Reply

%d bloggers like this: