மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள வன்னி வேலம்பட்டி கிராமம் முற்றிலும் விவ சாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், தமிழகத்தில் வேறு எங்கும் காணாத புதுமையை இங்கு காணலாம்.

குலதெய்வங்கள், முன்னோர்கள், திரைப்பட நடிகர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுபவர் களுக்கு மத்தியில் வன்னிவேலம்பட்டி கிராமம் சற்றே வித்தியாசமானது. கம்யூனிஸம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்த கிராமத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், ஹோசிமின் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் தொடங்கி ஜோதிபாசு, நிருபன் சக்ரவர்த்தி போன்ற இந்திய தலை வர்கள், ராமமூர்த்தி, உமாநாத், ஜீவா என தமிழக கம்யூனிஸ தலைவர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர். மேலும் முற்றிலும் வித்தியாசமாக கியூபா, வெண்மணி போன்ற ஊர் பெயர்களையும் பிள்ளைகளுக்குச் சூட்டி யுள்ள பெற்றோரும் உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திலும் கம்யூனிஸ பாரம்பரியம் உள்ளது. கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும் தங்களுக்கு வைக்கப்பட்ட சர்வதேச கம்யூனிஸ தலைவர்களின் பெயர்களையும், அவர்களின் வரலாறுகளை யும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் 35 ஆண்டு களாக கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் இருந்ததை போல இந்த கிராமமும் தொடர்ந்து 35 ஆண்டுகளாக கம்யூ னிஸ்டுகளின் கோட்டையாகவே இருந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்வெற்றி பெற்றபோது, தமிழகத்தின் மேற்கு வங்கம் என சுவரொட்டிகள் ஒட்டி தெருவெங்கும் பரப்புரை செய்யும் அளவுக்கு கம்யூனிஸ தாக்கமும், பாரம்பரியமும் நிறைந்த ஊர் இது. தற்போதைய தலைமுறையினரிடம் இந்த ஆர்வம் தொடர வேண்டும் என்ற நோக்கில் கிராமங்களில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூலகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கம்யூனிஸ தலைவர்கள் அழைத்து வரப்பட்டு கட்சியின் கொள் கைகள், தற்போதைய அரசியல் சூழல்குறித்து இளைஞர்களுக்கு கருத்தரங்குகளை நடத்துகின்றனர். வீடுகளின் முகப் பில் கூட கம்யூனிஸ கொடிகளையே அதிகளவில் பார்க்க முடியும்.

இந்த வழக்கம் குறித்து கிராமத்தினர் கூறுகையில், வன்னிவேலம்பட்டி கிராமத்தில் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சி தான் செல்வாக்குடன் திகழ்ந்தது. பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த கம்யூனிஸ தலைவர்கள் வன்னிவேலம்பட்டி மக்கள் மத்தியில் கம்யூனிஸ கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதுமுதல் எங்கள் கிராமத்தில் இருந்த படித்தவர்கள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை அனைவரும் கம்யூனிஸ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதைப்பின்பற்ற தொடங்கினோம். இதன் தொடர்ச்சியாக எங்கள் கிராமத்து மக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. உள்ளூர் முதல் உலக வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படிக்கத் தொடங்கினர். இதனாலேயே கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்யூனிஸ தலைவர்களின் பெயர் களைச் சூட்ட முடிவெடுத்தோம்.

இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறோம். இதற்காக எங்கள் கிராமத்தில் மற்ற கட்சிகளை ஆதரிப் போரை நாங்கள் என்றும் எதிர்த்த தில்லை. இந்த தெளிவையும், பகுத்தறியும் தன்மையையும் எங்களுக்கு அளித்தது கம்யூனிஸ கொள்கைகள் தான். இளைஞர்களிடம் இந்த ஆர்வத் தை ஊக்குவிக்க கம்யூனிஸ தலைவர்களின் நூற்றாண்டு விழாக்கள் எங்கள் கிராமத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். மக்கள் மத்தியில் முற்போக்கு கருத்துகளை விதைக்கும் வகையில் கலைக்குழுக்கள் மூலம் அடிக்கடி வீதிநாடகங்கள் நடத்தப்படும். இளைஞர் களிடம் இதனால் ஏற்பட்ட தெளிவு காரணமாக குற்றச்சம்பவங்கள் ஏதும் பெரியஅளவில் நடப்பதில்லை. பெண்ணடி மைத்தன சிந்தனை என்பது எங்கள் கிராம இளைஞர்களிடம் எள்ளவும் இல்லை என்பதை பெருமையாக கூறுவோம். இங்கே சூட்டப்படும் பெயர்கள் வெளியூர்வாசிகளுக்கு வித்தியாசமாக தெரியும். ஆனால், அது எங்களுக்கு உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். இதைஒரு பெருமையான அடையாளமாகவே கருதுகிறோம் என்றனர்.

த.சித்தார்த்
நன்றி: தினமணி புத்தாண்டு மலர் 2018

Leave A Reply

%d bloggers like this: