இராமேஸ்வரம், டிச.31-
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்தெறிந்து அராஜகம் செய்துள்ளனர். இரண்டு படகுகளுடன் 13 மீனவர்களை கைது செய்து ஞாயிற்றுக்கிழமை இலங்கை சிறையில் அடைத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ் வரத்தில் இருந்து சனிக்கிழமை 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 30 க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை கடலில் வெட்டி விட்டுள்ளனர். இதனையடுத்து.கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த அருளானந்தம் மற்றும் ஞானசீலன் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். படகில் இருந்த இருதயராஜ், கிறிஸ்துராஜ், பாஸ்கரன், மைக்கேல், சோனா,ஜெபாஸ்டீயான், திவாகர் உள்ளிட்ட 13 மீனவர்களை கைது செய்தனர். இதனைதொடர்ந்து படகுடன் மீனவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படகை பறிமுதல் செய்த கடற்படையினர் மீனவர்களை நீரியல் துறையிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து ஊர்க்காவல் துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். 13 மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஜனவரி 12 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து 69 மீனவர்கள் விடுவிக்கப் பட்டு தமிழகம் திரும்பிய நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply