சண்டிகர்,

ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட ராணுவ வீரரின் மனைவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்கில் போரில் உயிரிழந்த அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமண தாஸ் மனைவி சகுந்தலா தேவி(55) கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானதை அடுத்து, அவரது மகன் பவன்குமார், அவரை சோனிபட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது மருத்துவமனையில் சகுந்தலாவின் ஆதார் அட்டையை கேட்டுள்ளனர். இதையடுத்து பவன்குமார் தனது மொபைலில் இருந்த சகுந்தலாவின் ஆதார் அட்டையின் புகைப்படத்தை காட்டியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம் அசல் ஆதார் அட்டை இல்லாததால் சகுந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பவன்குமார் சகுந்தலாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.   பவன்குமாரின் புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்நிலையில், அரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ், இது தொடர்பாக விசாரணை நடத்த சோனிபட் நகருக்கு விசாரணை குழு சென்றுள்ளது என்றார்.

அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.