சென்னை, டிச.31-
அறநெறிசார்ந்த அரசியலை முன்னெடுப்போம் என தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி வருமாறு:தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிற பொழுது புதிய நம்பிக்கைகளும் பிறக்கின்றன. கடந்துசெல்லும் ஆண்டு பல்வேறு அனுபவங்களை விட்டுச் செல்கிறது. அனுபவங்களை அடியுரமாக்கி புதிய நம்பிக்கைப் பூ மலரட்டும் என வாழ்த்துகிறோம்.கடந்த 2017 ஆம் ஆண்டில் வலதுசாரி இந்துத்துவா தாக்குதல் அதிகரித்தபோதும் அதை எதிர்கொள்ளும் சக்திகளும் வலிமைபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். மத்தியிலுள்ள மோடி அரசு ஒரு புறத்தில் தனது மதவெறி நிகழ்ச்சி நிரலையும், மறுபுறத்தில் கார்ப்பரேட் ஆதரவு- மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையையும் நடைமுறைப் படுத்துகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும், மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டாட்சி விழுமியங்கள் மீதும் இரட்டைத் தாக்குதல் நடைபெறுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் மரபு வழிவந்த பன்முகப் பண்பாட்டினைச் சிதைத்து, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. மக்களின் உணவு உரிமை, இணையைத் தேர்வு செய்யும் உரிமை என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. ஆனால் அதே நேரத்தில்கருத்துத் தளத்திலும், போராட்டக்களத்திலும் கூர்மையான எதிர்ப்பு எழுந்து வருகிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரிபோன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் மேலும் மேலும் மோசமடைகிறது. வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத் தின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

மதவெறிக்கு எதிராகவும், தீங்குபயக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் உக்கிரமான போராட்டங்கள் நடைபெறும் ஆண்டாக 2018 அமையும் என்பது திண்ணம். தமிழகத்தில் மோடி அரசின் ஆசியோடும் ஆளுநரின் தயவோடும் தொங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசுமாநில உரிமைகள் பற்றியோ மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ சற்றும் கவலைப்படவில்லை. தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும் நிலையிலும் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள்.

கீழடி அகழ்வாய்வு முடக்கம், கட்டாயஇந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, இயற்கைக் பேரிடர் நிவாரணம் வழங்க மறுப்பு என தமிழகத்திற்கு மோடி அரசு தொடர்ந்து வஞ்சகம் இழைக்கிறது. இதை தமிழகம் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்க வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றும் முயற்சி மக்களாட்சித் தத்துவத்தையே சாரம் இழக்கச் செய்துவிடும். இதற்கு எதிராக மக்கள் நலனுக்கான மாற்றுக் கொள்கையை முன்வைத்து அறநெறி சார்ந்த அரசியலை முன்னெடுக்க இந்த புத்தாண்டில் உறுதியேற்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.