ஐதராபாத்,

தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கு அரசின் புத்தாண்டு பரிசாக டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தற்போது ஒன்பது மணி நேர மின் விநியோகத்தை பெறுகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மாநில அரசின் புத்தாண்டு பரிசாக வரும் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு என 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தெலுங்கானா. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இந்த திட்டத்திற்காக ரூ.12610 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்தின் மூலம் பம்ப் செட்கள் வைத்துள்ள 23 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் மின்சக்தி துறையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் மீறி, விவசாய துறையில் 24 மணி நேர மின்சாரம் வழங்கும் நாட்டின் ஒரே மாநிலமாக தெலுங்கானா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது 24 மணிநேர விநியோகம் வழங்கப்படும் என்று சந்திரசேகர் ராவ் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: