சிம்லா: சிம்லாவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்த காங்.,. பெண் எம்எல்ஏ பெண் காவலரை அறைந்ததும் பதிலுக்கு பெண் காவல் எம்எல்ஏ-வை அறைந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.

இமாச்சல்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சிம்லாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பெண் எம்எல்ஏ ஆஷா குமாரி வருகைதந்திருந்தார். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் ஆஷா குமாரியை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இதன்பின்னர் சற்றும் தாமதிக்காமல் அந்த பெண் காவலரும் எம்எல்ஏ ஆஷா குமாரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆஷா குமாரி கூறியதாவது:  பெண் போலீஸ் என்னை திட்டி தள்ளிவிட்டார். அவர் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க வேண்டும். அவரது தாயார் வயது தான் எனக்கும் இருக்கும். நான் கோபப்பட்டிருக்கக்கூடாது என்பதை ஏற்று கொள்கிறேன். எனது நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.