வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கம், கீழ்வெங்கடாபுரம், வடகண்டிகை, புதுகண்டிகை, பழையகண்டிகை, சயனபுரம், அருந்ததிபாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் உள்ளனர்.

இவர்கள் தங்கள் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்த்து வரும் மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரியாகுடல், திருமால்பூர் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வர வேண்டிய நிலை இருந்து வந்தது.இந்நிலையில் சயனபுரம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதனை ஏற்று கடந்த சிலவருடங்களுக்கு முன்பு சயனபுரம் கிராமத்தில் கால்நடைக் கிளை மருத்துவமனை கட்டி திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை திறக்கப்பட்டதால் மாடு, ஆடு, கோழிகளுக்கு விவசாயிகள் சிகிச்சை பெற்று வந்தனர். வாரத்திற்கு 3 நாட்கள் கால்நடை மருத்துவமனை செயல்பட்டதால் அந்த நாட்களை எதிர்பார்த்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து சென்றனர்.

இந்நிலையில் என்ன காரணத்தினாலோ கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவமனை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மருத்துவமனைக்கு டாக்டர்கள் யாரும் வருவது இல்லை. மாடுகளுக்கு நோய் வந்தால் விவசாயிகள் மாடுகளை கரியாகுடல், திருமால்பூர் உள்ளிட்டபகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். சில நேரங்களில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நோயினால் பாதிக்கப்படும் கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் செத்து விடும் நிலை இருந்து வருகிறது.

இதனால் மனமுடைந்து போகும் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளுக்கு நோய்கள்ஏற்பட்டால் அதை குறைந்த விலைக்கு விற்று விடும் அவல நிலை கடந்த சில மாதங்கள் சயனபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. கிளை கால்நடை மருத்துவமனை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் கட்டிடத்தை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகின்றன.

சயனபுரம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள கிளை கால்நடைமருத்துவமனையை ஆயிரக்கணக்கான விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்தோம். மருத்துவமனைக்கு விவசாயிகள் கால்நடைகளைக் கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் வாரத்தில் 3 தினங்கள் மருத்துவமர்கள் வந்து திறந்து வைக்க வேண்டும்.

அவ்வாறு திறந்து வைத்தால்தான் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து மாடுகளுக்கு சிகிச்சை பெற்று செல்ல முடியும். கடந்த ஒரு வருடத்திற்கு மேல் மூடியே வைத்திருப்பதால் விவசாயிகள் மருத்துவமனைக்கு வந்து திரும்பி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் கொடிய நோய்கள் வரும்போது ஆடு, மாடுகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் செத்து மடிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலை உருவாகாமல் தடுக்க பூட்டி கிடக்கும் கிளை கால்நடை மருத்துவமனையை உடனடியாக திறந்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • கே.ஹென்றி

Leave A Reply

%d bloggers like this: