புதுதில்லி;
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆட்களை கடத்துதல், அடிமைப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு, தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறையும், சம்பந்தப்பட்ட நபர்கள், மறுபடியும் மறுபடியும் இதே குற்றங்களை செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கும் வகையில் இந்த புதிய சட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எவையெல்லாம் பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்கள் என்று மத்திய அரசின் பெண்கள் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை வரையறையும் செய்துள்ளது.ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொத்தடிமைகளாக வைத்திருத்தல், ஆபாச படம் எடுத்தல், உடலிலுள்ள உடல் உறுப்புகளை அகற்றுதல், கட்டாயமாக பிச்சை எடுக்க வைப்பது போன்றவை, புதிய சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கத்தக்க குற்றங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

மிரட்டித் திருமணம் செய்வது, பணம் போதைப்பொருட்கள் போன்றவற்றை கொடுத்து திருமணத்துக்கு நிர்ப்பந்தம் செய்வது, முன்கூட்டியே திட்டமிட்டு மோசடி செய்து திருமணம் செய்வது போன்ற குற்றங்களிலும் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், இதில் கொடூர குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.இவை மட்டுமன்றி, பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டு எடுக்கப்பட்ட படங்களை எலக்ட்ரானிக் ரீதியாகவோ, அல்லது புத்தகமாகவோ வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டு தண்டனை வழங்கலாம்; மேலும் இதுபோன்ற படங்களை வைத்து பணம் பறிப்பது, மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.