“புத்தி கெட்ட ராஜாவுக்கு மதிகெட்ட மந்திரி” என்றகிராமத்து பழமொழி போல பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து மலையில் வசிக்கும் மலைவாசிகளுக்கு பழங்குடியின சாதிச்சான்று தர 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள்கேட்கும் அதிகாரிகளும், அவர்களை வழிநடத்தும் தமிழக அரசும் உள்ளன என்றால் மிகையல்ல.

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் 173 மலைகிராமங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிக்கும் இக்கிராமங்களில் வேலைவாய்ப்பிற்கான எந்த வசதியும் கிடையாது. இம்மலைமக்கள் நீண்ட காலமாக வசித்து வந்தாலும், அனுபவ நிலங்களில் பயிர் செய்து வந்தாலும் இவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க சாதிச்சான்று முக்கியமாகும்.

ஆனால் இந்த சாதிச்சான்று கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. “மாணவர்களை கல்லூரியில் படிக்க வைக்க இனச் சான்று கேட்டு விண்ணப்பித்தால் அதற்குவிசாரணை நடத்த 20 வகையான சான்றுகளை இணைக்கச் சொல்லுகிறார்கள் அதிகாரிகள். எங்களுடைய பழங்குடியினச் சாதிச்சான்று, நோட்டரி வழக்கறிஞரிடம் தந்தைக்கும், மகனுக்கும் சான்று, திருமணத்தில் கட்டுவது பட்டை சாமி தாலியா, ராம நாமதாலியா, எப்படி சாமி கும்பிடுவீர்கள், எவ்வளவு வருஷமா குடியிருக்கறீங்க, குடும்பத்தில் யாராவது செத்துட்டா எப்படி சடங்கு செய்வீங்க என்று கேட்டு ஆதார் கார்டு, ரேஷன் கார்டுபோன்ற பலவற்றை இணைக்கச் சொல்கிறார்கள் என்று வேதனைப்பட்டனர்.

மலைகிராமங்களில் வசிக்கும் வி.அண்ணாமலை, ஏ.செல்வராஜி, எல்.கோவிந்தன், சடையன், கே.திருமலை ஆகியோர். இப்படி சான்றுகளை கேட்பது ஒருபுறம் இருந்தாலும் தந்தையின் தந்தை இறந்தது தெரியுமா, அவர் பிறந்தது தெரியுமா என்றெல்லாம் கேட்டுசான்று தராமல் அலைக்கழிக்கின்றனராம் உரிய அதிகாரிகள். கிராமநிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், தனி வட்டாட்சியர் என இவர்களை பார்ப்பதற்கே கடுமையாக அலைய வேண்டியுள்ளதாகவும் அப்பாவி மலைவாழ்மக்கள் கூறுகின்றனர். குவார்ட்டர்ஸ் கட்டி பலமாதங்களாக திறக்கப்படவேயில்லை.

காசேதான் கடவுளடா…
ஆனால் கிராம உதவியாளர்கள் இம்மலை கிராமங்களில் புரோக்கர்களாக செயல்பட்டு ரூ 20 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு சிலருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று பெற்றுத் தருவதாக குற்றம் சுமத்துகின்றனர் மலைமக்கள் பலர். அப்படி பணம்கொடுத்த சிலருக்கும் சாதிச் சான்று கிடைக்காமல் ஏமாந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உருண்டோடும் பூசணி… பிடிபடும் கடுகு…
பழங்குடியின மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை தவறானவர்கள் அபகரித்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் தரையில் வசிக்கும் ஆளும், ஆண்ட கட்சிகளின் முக்கியபிரமுகர்கள் கல்வராயன்மலையில் வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டிடங்கள், நிலங்கள் என வாங்கி அல்லது ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவே தெரிகிறது.

இவை பினாமி பெயர்களில் உள்ளதெனவும், இவர்களுக்கு எந்த நிபந்தனையும் தடையாக இல்லை எனவும் கூறுகின்றனர் மலைமக்களில் பலர். ஆனால் காலங் காலமாக மலையை பூர்வீகமாகக் கொண்டு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்று தர மறுக்கும் அதிகாரிகளால் அனைத்து முன்னேற்றங்களும் பாதிக்கப்படுகிறது.

பரிதவிக்கும் மாணவர்கள்
5ஆம் வகுப்பிற்கு மேல் சேர்க்க முடியவில்லை, அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாமல்பணம் கட்டி 15 க்கும் மேற்பட்டமாணவர்கள் கல்லூரியில் படிக்கின்றனர். கிட்டத்தட்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயர் கல்வி வாய்ப்பு பறிபோயிருப்பதாக கூறுகின்றனர்.

பட்டா நிலம் இருக்கும் சிலருக்கு கூட வங்கிக் கடன் கிடைப்பதில்லை. தாட்கோ கடனுக்கும் இதே நிலைதான்.மாட்டுக்கடன், மரவள்ளி பயிருக்கான உதவித்தொகை என ஏதும் கிடைக்காமல் மிகப்பெரும்பாலான மலைமக்கள் வேதனையில் உழல்கின்றனர். அப்பாவி மலைமக்கள் எப்போதாவது கண்ணில் அகப்படும் உரிய அதிகாரிகளை கேட்டால் “வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு” என்பதுபோல கேட்கும் சான்றுகளை தந்தால் சாதிச்சான்று தருவதாக கூறுகின்றனராம்.

வன்கொடுமை…
கடந்த 26 ஆம் தேதிதான் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழுப்புரத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இம்மக்களுக்கான வன்கொடுமை தடுப்புச்சட்ட விதிகளின்படி மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளின் மெய்த்தன்மை குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் எடுத்த முடிவுகள் வெளியே கூறப்படாவிட்டாலும் பல்லாண்டுகளாக சாதிச்சான்று கிடைக்காமல் வாழ்வின் அடிமூட்டையாய் கிடக்கும் கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு சில சுயநல அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் ஒரு வகையான வன்கொடுமைதான் இது என்பது வெளிப்படை. இதற்கு ஏதாவது விசாரணை நடக்குமா என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

காத்திருப்பு போராட்டம்…
இந்த அவல நிலையைப் போக்கிட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மலைவாழ் இளைஞர் சங்கம் சார்பில் எதிர்வரும் புத்தாண்டில் ஜனவரி 4 ஆந்தேதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாகக் கூறினர் இச்சங்க நிர்வாகிகள்.

இதில் சங்கத்தின் மாநிலத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, பொதுச் செயலாளர் என்.சரவணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மலைவாழ் இளைஞர் சங்க மாநிலப் பொருளாளர் வி.ஏழுமலை, பொறுப்பாளர் பி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

  • வி.சாமிநாதன்.

Leave a Reply

You must be logged in to post a comment.