போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.57 காரணி அடிப்படையில் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தவிர்க்க இயலாதது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கான 11வது சுற்றுப் பேச்சுவார்த்தை புதனன்று (டிச.27) சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் புதனன்று (டிச.27) நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச்செயலாளர் டேவிதார், மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் 46 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜன.3ல் பேச்சுவார்த்தை: அமைச்சர்
இப்பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2.44 காரணியை அடிப்படையாக கொண்டு ஊதியம் வழங்கப்படும். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 1468 ரூபாய் முதல் 6 ஆயிரத்து 938 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. 2.57 காரணி அடிப்படையில் கேட்டுள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர், நிதித்துறைச் செயலாளருடன் கலந்தாலோசிக்கப்படும். ஜன.3ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எட்டப்படும் என்றார்.

போராட்டம் தவிர்க்க இயலாது
தொழிற்சங்கங்கள் சார்பில் பேசிய சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், “ அரசு 2.44 காரணி என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும். அதுவும் 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் தருவோம் என்றார்கள். அதனை ஏற்க மறுத்துவிட்டோம். 2.57 காரணி என்ற அடிப்படையில் ஊதியத்தை கணக்கிடுவதோடு, 3 ஆண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்க வேண்டும். இதற்காக அரசு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 19,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

தொழிலாளர்களிடத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையை உரிய இனங்களில் ஏப்ரல் மாதம் முதல் செலுத்தப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய முறையில் பென்சன் கணக்கிட வேண்டும் என்பது ஒப்பந்தம். அதனை மீறி அரசு செயல்படுகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

தற்போதுள்ள நிதிநிலையில் 2.44 காரணிக்குமேல் தர இயலாது. இருப்பினும் முதலமைச்சர், நிதித்துறைச் செயலாளருடன் கலந்தாலோசித்து மீண்டும் ஜன.3ந் தேதி பேசலாம் என்று அமைச்சர் கூறினார். அதனை ஏற்றுக்கொண்டோம். அன்றைய தினம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.

வேலைநிறுத்தம்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கையில் ஒருமனதாக உறுதியோடு உள்ளோம் சாலைபோக்குவரத்து பாதுகாப்பு சட்டம் போக்குவரத்து கழங்களை பாதிக்கும். அந்த சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தால் அதனை எதிர்த்து வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொமுச தலைவர் சண்முகம் எச்சரித்தார்.

Leave A Reply

%d bloggers like this: