நாகர்கோவில்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி தாக்கிய ஒக்கி புயலால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளையும், உறவினர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

மீன்பிடி தொழிலும், விவசாயமும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.வியாழக்கிழமை புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு
வினர் குமரி மாவட்டம் வந்தனர்.மத்திய உள்துறை இணைசெயலாளர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் தலைமை யிலான மத்திய குழுவினர் வியாழக் கிழமை காலை 11.45 மணிக்கு குமரிமாவட்டம் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர்.

இக்குழுவில் மத்திய கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளத் துறை கமிஷனர் பால்பாண்டியன், மத்திய மின்துறைதுணை இயக்குனர் சுமன், மத்தியகப்பல்துறை அதிகாரி பரமேஸ்வர்பாலி, மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலஇயக்குனர் மனோகரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.மத்திய குழுவினர் தமிழக அரசு உயர்அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.இக்குழுவில் தமிழக அரசின்முதன்மை செயலாளர் மற்றும் வருவாய்நிர்வாக கமிஷனர் சத்தியகோபால், முதன்மை செயலர் மற்றும் மின்உற்பத்தி பகிர் மான கழகமேலாண்மை இயக்குநர் சாய்குமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், மாவட்ட ஆட்சி
யர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுக்கு புயல்பாதிப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது.

மீனவர்கள் ஆவேசம்
அதைத்தொடர்ந்து தூத்தூர் புனித யூதா கல்லூரியில் மீனவர்களுடன் மத்திய குழுவினர் கலந்துரையாடினர். இதில் பூத்துறை பங்குதந்தை ஆன்றோ ஜோரிஸ் உட்பட பாதிக்கப் பட்ட கடலோரபகுதிகளை சேர்ந்த பங்குதந்தையர், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மீனவர்களிடம் மத்திய குழுவினர் பேசுவதும், மீனவர்களுக்குப் புரியவில்லை. மீனவர் கோரிக்கைகள் மத்தியக்குழுவினருக்கு புரியவில்லை. ஆய்வில் இந்தகுழப்பத்தை கண்டிப்ப தாக மீனவர்கள் கூறினர்.மேலும் புயல் குறித்த முறையான முன்னெச்சரிக்கை வழங்காததால் பல மீனவர்கள் உயிர்இழந்துள்ளனர். இது கொலை குற்றத்திற்கு சமம். எனவே புயல் முன்னெச்சரிக்கையை முறையாக தெரிவிக்காத அதிகாரி கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். காணாமல் போன மீனவர் களை கண்டுபிடிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்றனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாகமத்திய குழுவினர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வள்ளவிளை மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்டமீனவர் குடியிருப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பங்குதந்தை டார்வின்
தலைமையில் அங்கு மீனவர்கள் மற்றும் கடலில் மாயமான மீனவர் களின் உறவினர்கள் வந்தனர். அப்போது மீனவர்கள் முறையாக அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என
எதிர்ப்பு கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.

மேலும் மத்திய குழுவினரிடம், “எங்களுக்கு பணத்தைவிட மனிதஉயிர் தான் முக்கியம். காணாமல்போன எங்கள் உறவினர்களைகண்டுபிடித்து தருவதற்குநடவடிக்கை எடுங்கள்” என்றனர்.பின்னர் 3 குழுக்களாக பிரிந்து புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் நிறைந்த மருந்து கோட்டை,பெரியகுளம், கல்படி, பத்பநாபபுரம், இலுப்பை கோணம், சித்திரங்கோடு ஆகிய பகுதிகளில் விவசாய, தோட்டக் கலை பயிர் பாதிப்புகளையும், மீனவ கிராமங்களான இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, வள்ளவிளை, பூத்துறை, நீரோடி, மார்த்தாண்டம்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சேதம், சாலை சேதம், வீடு, படகு சேதம் ஆகியவை குறித்து நேரில் ஆறுதல் கூறி, பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

பின்னர் மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மனுக் களை மத்திய குழுவினர் பெற்றனர்.புயல் சேதத்தை பார்வையிட வந்த மத்தியக்குழுவினரிடம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் என்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், என்.எஸ்.கண்ணன், என்.உஷாபாசி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி ஆகியோர் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: